
posted 20th August 2021
மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயங்களில் வழமையாக நடாத்தப்படும் வழிபாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் வேண்டுகோளை விடுத்ததைத் தொடர்ந்து வழிபாடுகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் இவ்வேளையில் அரசு மற்றும் சுகாதார துறையினர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப் பிடிக்கும்படி யாவரையும் தூண்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்டத்தின் தேவாலயங்களில் நாளாந்த திருப்பலிகள் இடம் பெற்று வருவதுடன் மக்கள் அவற்றில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தங்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றும் நோக்குடன் தற்பொழுது தேவாலயங்களில் நடைபெறும் வழமையான மத வழிபாடுகளை உடன் இடைநிறுத்தும்படி தங்கள் பங்கு தந்தையர்களுக்கு தெரியப்படுத்துமாறு ஆயரை வேண்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்பொழுது மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சகல ஆலயங்களிலும் மத வழிபாட்டு நிகழ்வுகள் யாவும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏனைய மதங்களின் தலைவர்களையும் மதத் தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் யாவரும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவாதிருப்பதற்கான சகல ஒத்துழப்புக்களையும் வழங்குவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ