
posted 28th August 2021
மன்னாரில் கொவிட் தொற்றார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் மரணமும் அதிகரிப்பதால் மன்னார் வாழ் பொது மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் இன்று சனிக்கிழமை (28.08.2021) காலை ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (28) நடாத்திய ஊடக சந்திப்பின்போது தொடர்ந்து தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் இவ்வாண்டு 1560 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது ஆகஸ்ட் மாதமாகிய இம் மாதம் மட்டும் 536 கொரோனா தொற்றாளர்கள் அதாவது, ஆண்டின் மூன்றில் ஒன்று பங்கு வீதமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வெள்ளிக் கிழமை (27.08.2021) மன்னார் மாவட்டத்தில் புதிதாக 27 கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் அண்ணளவாக ஒரு நாளைக்கு 20 லிருந்து 30 வீதமான மக்கள் கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, இவ்வாறான நிலை மன்னாரில் காணப்படுவதனால் மன்னார் மக்கள் கொவிட்-19 தடுப்பு முறைகளான சமூக இடைவெளியை பேணுதல், கைகைளை அடிக்கடி நன்கு கழுவுதல், முகக் கவசங்களை அணிதல் போன்ற முக்கியமான சுகாதார நடைமுறைகளை தவறாது கடைப் பிடிக்குமாறு சுகாதார துறை சார்பாக நான் இந்த நேரத்தில் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றேன்.
இத்துடன் நேற்று (27) வெள்ளிக்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் தங்கள் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் இருவர் மன்னார் பிரதேசத்தை சார்ந்தவர்களும் மற்றைய நபர் வவுனியாவிலிருந்து மன்னாருக்கு ஐசீசீ என அழைக்கப்படும் இடைத் தளங்கள் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு பத்து தினங்களாக ஐசீயு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு தற்பொழுது மரணிதுள்ளார்.
மன்னாரில் ஏற்கனவே பதின்மூன்று கொவிட் தொற்றாளர்கள் மரணித்துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.08.2021) இரண்டு பேரும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.08.2021) மூன்று நபர்களும் இதவரை மன்னாரில் மொத்தமாக இதுவரை பதிணெட்டு கொவிட் தொற்றாளர்கள் மரணத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் மன்னார் மாவட்டத்தில் கொவிட்- 19, முதலாவது தடுப்பூசியை 61,000 க்கு அதிகமான மக்களுக்கும், இரண்டாவது தடுப்பூசியை 52, 000 பேருக்கும் கொடுத்துள்ளோம்.
கடந்த ஒரு வாரகாலமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினரும் சுகாதார திணைக்களத்தினரும் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் அரசின் சுகாதார கட்டுப்பாட்டை மீறி தேவையற்று வீதிகளில் நடமாடும் நபர்களுக்கு விஷேடமாக அன்ரிஜன் பரிசோதனை இனிவரும் நாட்களில் திடீரென மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே தற்பொழுது மன்னாரில் கொவிட் தொற்றாளர்களின் மரண வீதம் அதிகரித்து காணப்படுவதால் மன்னார் வாழ் மக்கள் ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், சமூக பொறுப்புடனும் செயல்படுமாறு இந்த நேரத்தில் வேண்டி நிற்கின்றேன் என ஊடக சந்திப்பின்போது வைத்திய கலாநிதி க . சுதாகர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ