இலவு காத்த கிளிபோல் அரசு நிவாரண 2000 ரூபாவுக்காக மன்னார் பயனாளிகள்.

தொழில் வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்ட, அரசினால் வழங்கப்படும் எந்த சலுகைகளும் பெறாத குடும்பங்களுக்கு வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா நிதியானது இதுவரை மன்னார் மாவட்ட பயனாளிகள் பலருக்கு இன்னும் கிடைக்கப் பெறாததையிட்டு அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கொவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக நாட்டில் மூன்று வாரங்களாக முடக்கல் நிலை காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சில அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் ஒரு சிலர் நடமாடி வந்தாலும் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து வீட்டோடு முடங்கி கிடக்கின்றனர்.
நாளாந்த வருமானத்தை யே நம்பி வாழும் குடும்பங்கள் பல. அக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை இழந்து தவித்துக் கொண்டிருப்பது யாவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் எதிர்பாராத உயர்வு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் மேலுள்ள தாக்கம் அதிகமானதையிட்டு கவலை தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் அரசானது எந்த ஒரு அரசு சலுகைகளும் பெறாதவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா வழங்கும் திட்டத்தை அமுல் படுத்திய நிலையில் கடந்த வாரம் திங்கள் கிழமை (16.08.2021) முதல் அமுல்படுத்தியது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் இந் நிதி உதவி பெறுவதற்காக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து 7680 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது. இதற்காக 15.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதுவரை 2 மில்லியன் ரூபாவே மன்னார் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இப் பணம் கிடைத்த அன்றே ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிகுதியானவர்களுக்கு இத் தொகை கிடைக்கப் பெறாத நிலையில் தாங்கள் இலவு காத்த கிளிபோல் இருந்து வருவதாகவும் இதற்கான தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் கவலை தொவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோது தங்களுக்கு முதல் கட்டமாக ஒரு தொகை பணம் வந்ததாகவும் அவைகள் பகிர்தளிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி தொகையை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளதுடன் அப் பணம் விடுவிக்கப்பட்டதும் அவைகள் உடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இலவு காத்த கிளிபோல் அரசு நிவாரண 2000 ரூபாவுக்காக மன்னார் பயனாளிகள்.

வாஸ் கூஞ்ஞ