
posted 21st August 2021

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட் - 19 வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கு இரத்தம் தேவைப்படும் நிலமையும் உருவாகியுள்ளது.
இதற்கமைய தற்பொழுது இப்பிராந்தியத்தின் பல பிரதேசங்களிலும் இரத்தான முகாம்களை நடாத்தி இந்த முக்கிய காலகட்டத்தில் இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி நிந்தவூரில் இன்று சனிக்கிழமை இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ரிஸாலா (சமய, சமூக அறிவியலுக்கான வாழும் அமைப்பு) அமைப்பின் ஏற்பாட்டில் நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் மௌலவி எம்.யூ.ஆஸிக் அலி (காஸிபி) தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரத்ததான முகாமில் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள், இளைஞர்கள் பெருமளவில் குருதிக்கொடை வழங்கினர்.

ஏ.எல்.எம்.சலீம்