
posted 31st August 2021
ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கு அமைய சுதேச மருத்துவ அமைச்சின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்டத்தில் பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் “சுவதாரணி” பானம் வழங்கும் விஷேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுள்வேத பாரம்பரியபானமான சுவதாரணியை இலவசமாக விநியோகிக்கும் செயற்திட்டமொன்றை, நிந்தவூர் ஆயர்வேத ஆராய்ச்சி, தொற்றா நோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். கே.எல்.எம்.நக்பர் முன்னெடுத்துள்ளார்.
தற்போதய கொவிட் - 19 வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கிவரும் நிலையில், கொவிட் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன், குறித்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவதாரணி பான இலவச விநியோகம் இடம் பெற்றுவருகின்றது.
பணிப்பாளர் டாக்டர். நக்பரின் அர்ப்பணிப்பான சேவையால் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது மக்கள், அரச திணைக்களங்களின் முன்னணி உத்தியோகத்தர்கள், சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர், வீடுகளில் நோயுற்று முடங்கியிருப்போருக்கும் இலவசமாக இந்த பான விநியோகம் இடம் பெற்றுவருகின்றது.
அதே வேளை பின்தங்கிய பல கிராம மக்களுக்கும் நேரில் சென்று சுவதாரணி விநியோகம் செய்து வருவதுடன், கொவிட் முதலாம் அலை முதல் இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவதாரணி பக்கற்றுக்கள் விநியோகிகப்பட்டுமுள்ளது
மக்களுக்குப் பயனளிக்கும் இந்த சுவதாரணி இலவச விநியோகத்தைத் தாம் மேலும் தொடர்ந்து வருவதாகவும் பணிப்பாளர் டாக்டர். நக்பர் தெரிவித்தார்.
மேலும் கொத்தமல்லி, மஞ்சள் இஞ்சி, கறுவா, ஏலம், கராம்பு, நில வேம்பு முதலான ஆயர்வேத பொருட்கள் அடங்கியதாகவே சுவதாரணி பானதூள் அமைந்துள்ளதாகவும் பணிப்பாளர் டாக்டர். நக்பர் விளக்கினார்.

ஏ.எல்.எம்.சலீம்