
posted 25th August 2021

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஒரு முற்போக்கு சிந்தனையாளரும் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக இருந்து வந்தவர். அவரின் இழப்பு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தனது கவலையை தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தனது அறிக்கையில்
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஒரு முற்போக்கு சிந்தனையாளரும் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக இருந்து வந்தவர்.
அத்துடன் தமிழர்களின் உரிமைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த தமிழர்களின் பிரதேசங்கள் தகுந்த முறையில் அபிவிருத்தி காணவேண்டும் என்றும் அவா கொண்டு இருந்தவர்.
இலங்கை வாழ் மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அரசியலில் பல தலைவர்களின் மத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதில் அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தவர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் என்னுடன் தனிப்பட்ட முறையில் நன்கு பழகி வந்தவர்.
இவர் கடந்த காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்தபொழுது ஜெனிவாவில் கூட்டங்களில் பங்குபற்றி தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிட்ட வேண்டும் என்றும் பயங்கரவாத சட்டங்களை நீக்க வேண்டும் என்றும் அவா கொண்டு அவர் தெரிவித்து நின்றவர்.
அத்துடன் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் குறிப்பாக எமது பகுதியில் பல அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதில் குறியாக இருந்து செயல்பட்டவர்.
தற்பொழுதது சிறப்பாக காணப்படும் மன்னார் பஸ் நிலையம் கூட அவரால் அஸ்திவாரம் இடப்பட்டு அவற்றை கட்டிமுடித்து மன்னார் அபிவிருத்திக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்.
இன்னும் கூறப்போனால் அவருடைய காலத்தில் என்னால் சுட்டிக்காட்டப்பட்டவைகளை அவரால் முடிந்தளவு பல அபிவிருத்திகளை மேற்கொள்வதில் அக்கறை செலுத்தியவர் என்பது மறைக்க முடியாது.
அவரின் உறையாடல்களில் என்றும் இனவாதத்தை கக்கியதாக நான் அறியவில்லை. இலங்கை வாழ் எல்லா மக்களும் ஒற்றுமையுடன் சம உரிமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் இருந்தவர்தான் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.
இவரின் இழப்பு நாட்டுக்கு மட்டுமல்ல எமது சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பும் கவலையையும் உண்டு பண்ணியுள்ளது என இவ்வாறு தெரிவித்தார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.

வாஸ் கூஞ்ஞ