மன்னாரில் ஆவணி மாதம் கொரோனா தொற்றாளர்கள் 427 ஆக அதிகரிப்பு

இன்றைய தினம் (24.08.2021) மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சீ.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 22 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணி மாதம் இதுவரை 427 தொற்றாளர்களாக அதிகரித்துள்ளதாகவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் அறிக்கை தெரிவித்தள்ளது.

பணிப்பாளர் த.வினோதன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
மன்னார் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 பேரும் மன்னார் பொது வைத்தியசாலை, சமூகம், கடற்படை, பேசாலை மாவட்ட வைத்தியசாலை, அடம்பன், தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலைகள், மாந்தை மேற்கு மன்னார் நகரம் ஆகிய சுகாதார சேவை நிலையங்களிலும் சிவஅருள் இல்லத்திலும் உள்ளவர்களாவர்.

இதுவரை, மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் (2021) கொரோனா தொற்றாளர்களாக 1451 பேரும் ஆவணி மாதம் இதுவரையும் 427 ஆகவும் இனம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 மரணங்கள் சம்பவித்திருப்பதாகவும், ஆனால் இறப்பு வீதாசாரம் 0.90 லிருந்து 0.89 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பி.சீ.ஆர் பரிசோதனைகள், இன்றை தினம் 212 மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் (ஆவணி) இதுவரைக்கும் 1785ம், மொத்தமாக 27,621 மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், 212 நபர்களின் பி.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னாரில் ஆவணி மாதம் கொரோனா தொற்றாளர்கள் 427 ஆக அதிகரிப்பு

வாஸ் கூஞ்ஞ