
posted 13th August 2021

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நாட்டில் பரவி வரும் கொரொன தொற்று காரணமாக சுகாதார நடைமுறைக்கேற்ப சிவாச்சாரியார்களும், தொண்டர்களும் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களே நாளாந்தம் பெருந் திருவிழாவை நடத்தியும் வைப்பார்கள். திருவிழாக் காலத்தின் போது சுவாமி உள்வீதியில் மட்டுமே உலா வருவார்.
பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே திருவிழாவைக் காண்பதற்கு வசதியாக தொலைக்காட்சிகள் சமூகவலைத்தலங்கள் மூலமாக திருவிழா நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை தொடங்கும் இப்பெருந்திருவிழா 25 தினங்கள் தொடர்ந்து நடைபெறும். கொடியேற்ற தினமான இன்றைய தினம் கோவிலின் பிரதான வாசலுக்கு நேராக உள்ள பருத்தித்துறை வீதியினூடாக கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்களை உட்செல்ல விடாது கோயில் நிர்வாகிகள் தடுத்தனர். ஆகவே, பக்தர்கள் அந்த இடத்தில் நின்றவாறு வீதியில் கற்பூரங்கள் கொளுத்தி வழிபாடுகள் செய்து திரும்பினர்.

எஸ் தில்லைநாதன்