posted 24th August 2021
இன்று காலையில் (24.08.2021)மங்கள சமரவீரவை நாடு இழந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபொழுது மிகுந்த அதிர்ச்சியை அடைந்தோம்.
இவ்வாறு தொடர்ச்சியாக பல திங்களாக கொரேனா வைரஸ் தொற்றினால் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். இலட்சக்கணக்கில் உயிருக்குப் போராடும் மனிதகுலத்தின் ஈனக்குரலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
மங்கள சமரவீரா பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேச மக்களுக்காக நீதிக்காக, தமிழர் தேசமக்கள் அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பிய, செயல்பட்டு வந்த மனித நேயமிக்க ஒரு அரசியல் தலைவனை ஜனநாயகம், மனிதாபிமானம், விடுதலைக்காக ஏங்கிநிற்கும் மக்கள் இழந்து நிற்கிறார்கள் எனும் பொழுது நாம் நெஞ்சாரத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறோம்.
மங்கள சமரவீரவை ஒரு பௌத்த சிங்களத் தலைவனாக நாம் பார்த்ததில்லை. பழகவில்லை. இலங்கையில் அரசியலில் மங்களாவை அமைச்சரவையில் இணைத்துகொண்ட சிங்களத் தலைமைத்துவங்களின் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காகவும் போரினால் அழிந்து போன தமிழர் பிரதேசத்தையும் சீர்குலைந்துபோன மக்களையும் அரவணைத்து மீண்டும் வாழ்வுபெறவும், உரிமை பெறவும் முன்னின்று செயலாற்றியமையை நினைவு கூருவோம்.
பௌத்த சிங்களத் தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவும் மங்கள சமரவீரா தவறவில்லை என்பதைக் கூறுவோம். பௌத்த சிங்களத் தீவிர சக்திகள் மங்களவைத் திட்டித் தீர்த்தமையை அறிவோம்.
நாள்தோறும் கொரோனா வைரஸ் கொடுமையால் உயிர்ப்பலி கொடுக்கும் மக்களில் இலங்கைத்தீவில் மனித நேயமிக்க ஒரு அரசியல் தலைவனை இழந்துவிட்டோம் என்பதுதான் இன்றைய முக்கிய செய்தி ஆகும்.
சர்வதேச அரங்கிலும் இலங்கையின் இழந்துபோன கௌரவத்தை ஜனநாயகத்தை நீதியை ஐ.நா மன்றத்திலும் உலகத் தலைவர்கள் மத்தியிலும் மீட்டுப்பெரும் மேன்மையைப் பெற்றவர் மங்கள சமரவீர. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை நிலைநாட்டிய நட்சத்திரமாய், தலைவனாய் விளங்கிய மங்களாவை இழந்து தவிக்கிறோம் என்பதையும் பதிவு செய்கிறோம்.
மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரு மகத்தான தலைவனை, தென்னிலங்கையில் ஜனநாயக நட்சத்திரத்தை இழந்த அனைவருடனும் அன்னார் ஆத்ம சாந்திக்காக நாமும் இணைந்து பிரார்த்திக்கிறோம். அஞ்சலி செலுத்தி நிற்கின்றோம்.
மாவை.சோ.சேனாதிராசா
தலைவர், இ.த.அரசுக்கட்சி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில்

எஸ் தில்லைநாதன்