
posted 26th August 2021
மன்னார் மாவட்டத்தில் இந்த வாரம் முதல் அறுபது வயதுகளுக்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசிகள் பெறாதவர்களுக்கு அவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் அல்லது அவர்களின் வீடுகளில் இத் தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.
பணிப்பாளர் த.வினோதன் புதன் கிழமை (25.08.2021) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் 19 முதலாவது தடுப்பூசி 59,770 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி இதுவரை 49,844 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இப்புதிய நடவடிக்கையின் படி நேற்றைய முன் தினம் (24.08.2021) வரை அறுவது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 600 பேருக்கு மேல் இத் தடுப்பூசி வழங்கப்பட்டது. இன்றும் (25) இரண்டாவது நாளாக இத் தடுப்பூசி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
இதுவரை மன்னார் மாட்டத்தில் முதலாவது தடுப்பூசி 78 சதவீதமானவருக்கும், இரண்டாவது தடுப்பூசி 64 சத வீதமானவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், 69.05 சத வீதமான அறுவது வயதுகளுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றிருப்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் 5626 பேர் தடுப்பூசிகளை பெறாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 1400 பேர்களின் பெயர் விபரங்கள் பெறப்பட்டு இவர்களுக்கு இவ்வாரம் இத் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம், பிரதேச செயலகங்கள், பாதுகாப்பு தரப்பினர் ஒன்றினைந்து இச் செயல்பாட்டை முன்னெடுக்கவுள்ளது.
அத்துடன் நேற்றையத் தினம் (24.08.2021) மன்னார் மாவட்டத்தில் 66 நபர்கள் கொவிட் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிள் 07 பேர் மாவட்ட பொது வைத்தியசாலையில் 44 பேர் அன்ரிஜன் பரிசோதனையிலும். ஏனையோர் பி.சீ.ஆர் பரிசோதனையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவற்றுடன் இந்த மாதம் (ஆவணி) மொத்தமாக 493 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொடங்கியது முதல் இன்று வரை மொத்தமாக 1534 பேரும், இவ் வருடம் (2021) 1517 நபர்களும் கொவிட் தொற்றாளர்களாக மன்னார் மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனர்.
தற்பொழுது கொவிட் தொற்றானது இரண்டு வகையான குணம் குறிகளுடன் காணப்படுகின்றது. ஒன்று உடல் சோர்வு, தலையிடி, காய்ச்சல் போன்றவையும் அடுத்த வகையானது காய்ச்சல், தொண்டை நோவு, சுவாச பிரச்சனை போன்றவைகளாக காணப்படுகின்றது.
அத்துடன் கொவிட் அறிகுறிகள் இல்லாதவர்களும் இவ் தொற்றுக்கு உள்ளாயிருப்பது அடையாளம் காணப்பட்டு வருகின்றது.
சுவாச அறிகுறிகள் இறுமல், காய்ச்சல், தலையிடி, தொண்டை நோவு, சுவாசிப்பது சிரமம் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கொவிட் அறிகுறியுடன் இருப்பவர்களை அவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டியது கட்டாமாகும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ