தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் மக்கள் ஆர்வம்
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் மக்கள் ஆர்வம்

டாக்டர். பரூஸா நக்பர்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், கொவிட் - 19 வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் பொது மக்கள் பேரார்வம் காட்டிவருகின்றனர்.

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம் பெற்று வருகின்றது.

ஏற்கனவே முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தற்சமயம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதுடன், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணித்தாய்மாருக்கும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டிலும், பிராந்தியத்திலும் தணியாது உயர்ந்துவரும் கொவிட் - 19 வைரஸ் பரவலும், அதனால் மரணிப்போரின் மரணவீத அதிகரிப்பும் பொது மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் மக்கள் முன்னரைவிடவும் கூடிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் மக்களிடையே தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் ஏற்பட்டுள்ள அக்கறையும், ஆர்வமும் காரணமாக தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் நீண்ட கியூ வரிசையில் ஆண்களும், பெண்களும் காத்திருந்து தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சீனாவின் தயாரிப்பான “சினோபாம்” (sinopharm) தடுப்பூசியே ஏற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தெரிவித்தார்

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் மக்கள் ஆர்வம்

ஏ.எல்.எம்.சலீம்