சுகாதாரத்துறையினருக்கு பிரதேச சபையில் நன்றியும், பாராட்டும்
சுகாதாரத்துறையினருக்கு பிரதேச சபையில் நன்றியும், பாராட்டும்

நாட்டில் பெரும் அனர்த்தமாகத் தாண்டவமாடும் கொடிய கொவிட் - 19 வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் பொது மக்களைக் காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதாரத்துறையினருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் பெரு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட் - 19 வைரஸ் தொற்றும், இந்த வைரஸ் தொற்றாலான மரணங்களும் நாட்டில் கட்டுக்கடங்காது அதிகரித்துவரும் நிலையில், மக்களைக் காப்பாற்றும் பெரும் பணியில் உயிரைப் பணயம் வைத்தும், தியாக சிந்தையுடனும் சுகாதாரத்துறையினர் ஆற்றிவரும் அளப்பரிய சேவைகளை இதன்போது சபை உறுப்பினர்கள் பலரும் விதந்து பாராட்டியதுடன் அவர்களுக்கு நன்றிப் பெருக்கையும் வெளிப்படுத்தினர்.

நிந்தவூர் பிரதேச சபையின் ஆகஸ்ட் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 41 ஆவது கூட்ட அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் (அஷ்ரப்) தலைமையில், சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்ட அமர்வில் பிரதேச கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டதுடன், கொவிட் - 19 ஒழிப்பு நடவடிக்கைகளில் பிரதேச சபையின் முக்கியப்பங்களிப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பிரதேச கொவிட் - 19 வைரஸ் பரவல் ஒழிப்பு தொடர்பாக தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் சபை அமர்வில் முக்கிய உரையாற்றியதுடன், சபை சார்பாக நாட்டின் சுகாதாரத்துறை சார்ந்தோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் பிரேரணை ஒன்றையும் முன்மொழிந்தார்.

தவிசாளர் தாஹிர் இது விடயமாக சபை அமர்வில் உரையாற்றும் போது மேலும் பின்வருமாறு கூறினார்.
“கொடிய கொவிட் - 19 வைரஸ் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்தும், அதனால் மரண சம்பவங்கள் அதிகரித்தும் வரும் நிலையிலும், பொது மக்கள் இதன் தாத்பரியங்களை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மக்கள் தற்போதய இக்கட்டான சூழ்நிலையில், பொறுப்புணர்ந்து செயற்படுவதுடன், கொவிட் ஒழிப்பு சுகாதார வழிகாட்டல்கள், நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மக்களைப் பாதுகாப்பதற்காக பெரும் பிரயத்தனங்களை அரசும், துறைசார்ந்தவர்களும் முன்னெடுத்து வரும் நிலையில், பொது மக்கள் உணர்ந்து செயற்படாவிடின் இக்கொடிய வைரஸ் தாக்க அனர்த்தத்திலிருந்து நாம் மீள்வது கடினமாகவே அமையும்.

இந்த நிலையில் கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலையில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அயராது சேவையாற்றிவரும் சுகாதாரத்துறையினரின் அளப்பரிய சேவைகளை நாம் என்றும் மறந்துவிட முடியாது.

குறிப்பாக விசேட வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள், வைத்தியசாலைகளின் பணியாளர்கள் இரவு, பகல் பாராது ஆற்றிவரும் சேவைகளை நாம் உயர்ந்த நிலையில் நோக்க வேண்டும்.

மக்களைக்காக்கும் இப்பணியில் கடமையாற்றிய மூன்று வைத்திய அதிகாரிகள் நாட்டில் இந்த வைரஸ் தொற்று காரணமாக மரணித்த துன்பியலுக்கு மத்தியிலும் பெரும் சேவையாற்றும் சுகாதாரத்துறையினருக்கு எமது பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

உறுப்பினர்கள் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், உப தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை, ஏ.எம்.அலிகான், ஏ.அன்ஸார், உட்பட பல உறுப்பினர்களும் கொவிட் - 19 ஒழிப்பு தொடர்பில் உரையாற்றியதுடன்,
இலங்கை சுகாதாரத்துறை சார்ந்த சகலருக்கும், பாராட்டும், நன்றியும் பகர்ந்தனர்.

சுகாதாரத்துறையினருக்கு பிரதேச சபையில் நன்றியும், பாராட்டும்

ஏ.எல்.எம்.சலீம்