சிறுபோக அறுவடை மிகத்துரிதமாக இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையின் அறுவடை வேலைகள் மிகத்துரிதமாக இடம்பெற்றுவருகின்றது.

சிறந்த சுய ஊக்கம் கொண்ட விவசாயிகளைக் கொண்ட அம்பறை மாவட்டத்தில் இம்முறை 80 ஆயிரம் ஹெக்டயரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவுகளான நிந்தவூர், சம்மாந்துறை, அக்கறைப்பற்று, குடுவில், இறக்காமம், சவளக்கடை முதலான பிரதேசங்களிலுள்ள விவசாயக்கண்டங்களில் சிறுபோக அறுவடை மும்முரமாக இடம்பெற்றவரும் நிலையில்,
அறக்கொட்டியா போன்ற பூச்சித் தாக்கங்களுக்கும் சிறுபோக நெற்செய்கை உட்பட்ட போதிலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு விளைச்சல் கிடைத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் நெல்லுக்கு விலையேற்றம் ஏற்படாததால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த போகங்களில் 66 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் ரூபா 5000 வரை கூட விற்பனையாகிய போதிலும், தற்சமயம் குறித்த ஒரு மூடை நெல்லை ரூபா 3200 வரையே விற்பனை செய்யக் கூடிய சந்தை நிலவரமுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

தற்போதய காலகட்டத்தில் விதை நெல், பசளை, கிருமிநாசினிகள் விலையேற்றம் உட்பட இயந்திர அறுவடைக் கூலிகளும் உயர்வடைந்துள்ளதால் குறைந்த விலையில் நெல்லை விற்று முதலைக்கூடபெற முடியாத நிலை ஏற்படுமென விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனால் அறுவடைசெய்து கொண்டுவரும் சிறுபோக நெல்லை வெய்யிலில் நன்கு உலரவைத்து அதனை சேமித்து வைப்பதிலேயே விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையால் மாவட்டத்தின் பிரதான வீதிகளின் மருங்குகளிலும், திறந்த வெளிகளிலும் விவசாயிகள் அறுவடை நெல்லை உலரவைத்து வருவதுடன்,
இதன் மூலம் அன்றாடக் கூலித் தொழில்லாளர்களுக்கு தினமும் நல்ல வருமானம் கிடைத்து வருவதால், நெல்லை வெளியில் பரப்பி வெய்யிலில் உலர வைத்து பைகளில் சேமிக்கும் நாளாந்த தொழிலில் ஈடுபடவென அயல் மாவட்ட கூலித் தொழிலாளர்களும் அம்பாறை மாவட்டத்திற்குப்படையெடுத்தவண்ணமுள்ளனர்.

சிறுபோக அறுவடை மிகத்துரிதமாக இடம்பெற்றுவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம்