சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா மறைவு
சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா மறைவு

சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜாவின் மறைவு கல்முனை மண்ணுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்

-முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்

கல்முனைப் பிராந்தியத்தின் புகழ்பூத்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜா அவர்களின் மறைவு தனக்கு மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜாவின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜா அவர்கள் கல்முனைப் பிராந்தியத்தில் இன ஒற்றுமைக்கு இலக்கணமாக இருந்து பங்காற்றியவர். சட்டத்துறையில் நீண்டகால அனுப்பமும் முதிர்ச்சியும் பெற்றிருந்த நண்பர் பேரின்பராஜா அவர்கள் சக சட்டத்தரணிகளுடன் மிகவும் அன்னியோன்யமாக இருந்து நட்புடன் வழிகாட்டி வந்த சிறந்த பண்பாளர்.

எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் அண்ணன் - தம்பி போன்ற நற்புறவு இருந்து வந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் ஆழமான புரிந்துணர்வுடன் நேசித்துக் கொண்டு பரஸ்பரம் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்டு நட்பு பாராட்டி வந்தோம். நான் எப்போதுமே அவரை அண்ணன் என்று அழைப்பதில் புளகாங்கிதமடைவேன். என்னுடைய தனிப்பட்ட விடயங்களிலும் புத்திமதிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டே இருப்பார். என்னிடம் மிகவும் ஆழ்ந்த அன்பையும் நேர்மையையும் வெளிக்காட்டி வந்த ஒரு சிறந்த நண்பராக இருந்து வந்தார்.

சிறுநீரக பாதிப்பினால் மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நண்பர் பேரின்பராஜா அவர்களை அங்கு சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தோம். இந்நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி அவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றேன்.

தனது சட்டத்தரணி தொழிலை மிகவும் கண்ணியமாகக் கருதி, நீதி, நேர்மையுடன் மேற்கொண்டு வந்ததுடன் ஏனைய சட்டத்தரணிகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்திருக்கிறார்.

இப்பிராந்தியம் ஒரு பாண்டித்தியம் பெற்ற சட்டத்தரணியை இழந்திருக்கிறது. அன்னாரது மறைவு கல்முனை மண்ணுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தியட்டும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவரை நேசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா மறைவு

ஏ.எல்.எம்.சலீம்