
posted 24th August 2021

டொக்டர் ஜீ.சுகுணன்
கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. அங்கு முன்னொருபோதும் இல்லாதவாறு ஒரே நாளில் 181 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அத்துடன் மூவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
இப்புள்ளி விபரமானது எமது பிராந்தியத்தில் கொரோனா பரவல் எல்லை மீறிச் சென்று, ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்று செவ்வாய்க்கிழமை (24) முற்பகல் 10.00 மணி வரையான 24 மணித்தியாலயத்தில் எமது கல்முனை பிராந்தியத்தில் 181 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஒரே நாளில் ஆகக்கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தே அதிக தொற்றாளர்களாக 31 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அத்துடன் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 21 பேரும் நிந்தவூர் பிரதேசத்தில் 20 பேரும் சம்மாந்துறை, காரைதீவு பிரதேசங்களில் தலா 11 பேரும் இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படி கல்முனை பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 6000 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் தற்போது 1171 பேர் வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 4127 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்கும்போது மேலும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
அதேவேளை, மேற்படி காலப்பகுதியில் இப்பிராந்தியத்தில் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்திருக்கின்றனர். கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவரும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
கண்முன்னே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டும் கொரோனா தொற்றில் இருந்து தம்மையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதில் பெரும்பாலானோர் அலட்சியப்போக்கில் நடந்து கொள்வதையே அவதானிக்கின்றோம்.
எவ்வளவோ விழிப்புணர்வையும் வழிகாட்டல்களையும் வழங்கியும் கூட இந்த ஆபத்தான கட்டத்தில் வீடுகளில் அடங்கியிருக்க முடியாதோர் எப்போது அடங்குவார்கள் என்று சுகாதாரத்துறையினராகிய நாங்கள் அங்கலாய்க்கின்றோம். கொரோனா தம் உயிரைக் காவு கொண்டு, ஒரேயடியாக அடங்குவதையா இவர்கள் எதிர்பார்க்கின்றனர்- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (24) முற்பகல் 10.00 மணி வரையான 24 மணித்தியாலயத்தில் 421 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அப்பிராந்திய தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்