
posted 15th August 2021

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், பொழுதுபோக்கு இடங்களில் பொது மக்கள் வழமை போன்று ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
நிந்தவூர் கொவிட் - 19 தடுப்பு செயலணி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், பொது மக்களுக்கு இது தொடர்பாகக் கண்டிப்பான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொவிட் - 19 வைரஸ் தாக்கம் கூடுதலாக கண்டறியப்பட்டு வருவதுடன், கொவிட் மரணங்களும் சம்பவித்து வருகின்றன.
இதனால் இத்தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வண்ணம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி நிந்தவூர் கொவிட் - 19 தடுப்பு செயலணி, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். திருமதி. பெரூஸா நக்பர் தலைமையில், அவசரமாகக் கூடிபல முடிவுகளை எடுத்துள்ளது.
குறிப்பாக நோய் நிலமை பாதகம் பற்றி உணராத வகையில் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள பொழுது போக்கு இடங்களில் தினமும் உள்ளுர் பொது மக்கள் உட்பட, அயல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி வருவது பற்றி விசேடமாகக ஆராயப்பட்டது.
இதனையடுத்து நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள சிங்கராத்தோப்பு, உள்ளாத்துக்கட்டு, வெளவாலோடை, சிறுவர் பூங்கா, வெல்லஸ் கட்டு உட்பட கற்கரைப் பிரதேசத்திலும் பொது மக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கொவிட் - 19 பரவல் ஓயும் வரை இத்தடை அமுல்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இத் தடை பற்றிய அறிவித்தல் பலகைகள் நிந்தவூர் பிரதான வீதியின் இரு எல்லைகளிலும் மக்கள் பார்வைக்காக நடப்பட்டுள்ளன.
இத்தடை அறிவித்தலை மீறி பொது மக்கள் ஒன்று கூடினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பெரூஸா நக்பர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்