
posted 30th August 2021
மூத்த ஒலி, ஒளி பரப்பாளரும், கலைஞரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லியாஉல்பனான், கலைச்சுடர், அல்ஹாஜ் எம்.பி. ஹுசைன் பாருக்கின் (Hussain Farook) மறைவு குறித்து, ஊடக அமைப்புக்கள், பிரமுகர்கள் உட்பட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – புதுக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்ட வானொலிக் கலைஞரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஹுசைன் பாரூக் சனிக்கிழமை தனது 78 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கொழும்பு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றது.
ஹுசைன் பாரூக்கின் மறைவு குறித்து இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான “நவமணி” பத்திரிகை ஆசிரியர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“இறையடியெய்திய வானொலி கலைஞரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஹுசைன் பாரூக் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனது வானொலி மற்றும் ஊடகப்பணியைத் தொடர்ந்து வந்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப்பிரிவு, முஸ்லிம் சேவை ஆகியவற்றில் தயாரிப்பாளராகவும் பின்னர் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் முத்துச்சரம், ரசிகர் அரங்கம் தயாரிப்பாளராகவும், புகழ் பெற்ற அபூநானா நாடக தயாரிப்பாளராகவும் மிளிர்ந்தார்.
பின்னாளில் “வர்ணம்” தொலைக்காட்சியில் “கன்சுல் இஸ்லாம்” நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவுமிருந்த அவர் தினபதி சிந்தாமணி பத்திரிகைகளிலும் ஊடகப் பணியாற்றியவராவார்.
ஊடகத்துறையில் இளைய தலைமுறையினர் பலரை வளர்த்து உருவாக்கிவிட்ட அவர், முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
அவரது இழப்பு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் உட்பட மேலும் சில ஊடக அமைப்புகளும் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளன.

ஏ.எல்.எம்.சலீம்