
posted 27th August 2021

அல்-ஹாஜ் அமீன்
“இந்த நாட்டு பெரும்பான்மை சமூக அரசியல் வாதிகளுக்குள் உண்மை, நீதியை உரத்துச் சொன்ன முன்னுதாரணமிக்கவராக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர திகழ்ந்தார்”
இவ்வாறு, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு குறித்து முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அல்-ஹாஜ் அமீன் தனது அனுதாப அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர போன்ற மனிதாபிமானம், உண்மை, நீதி மிக்கவர்களின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும்.
குறிப்பாக இந்த நாட்டு சிங்களத் தலைவர்களுக்குள் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை உண்மை, நேர்மையுடன் அணுகிய பெருந்தகையாக மங்கள சமரவீர திகழ்ந்தார்.
சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நீதி கிடைப்பதற்காகவும் மங்கள உரத்துக் குரல் கொடுத்து வந்தவராவார்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதற்காக கடுமையாக உழைத்துவந்த அவர்,
ஊடக அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்ட வரலாற்றையும் உருவாக்கினார்.
தேசப்பற்றாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கி சகல தரப்பினரையும் ஒன்றுபடவைத்து செயற்படுவதற்கான முயற்சியையும் எடுத்தார்.
தென் மாகாண சிங்களத் தலைமைகளுக்குள் உண்மை, நீதியை உரத்துச் சொன்ன மங்கள சமரவீரவின் இழப்பு பேரிழப்பாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்