
posted 26th August 2021

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவைச் சேர்ந்த நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் - 19 தடுப்பு மருந்தேற்றும் இராணுவத்தினரின் நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) வெற்றிகரமாக இடம்பெற்றது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து இராணுவத்தினர் தமது தடுப்பூசியேற்றும் நடமாடும் சேவையை முன்னெடுத்தனர்.
நிந்தவூர்ப் பிரதேசத்தில் கொவிட் - 19 பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடனும், தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோரையும், கர்ப்பிணித்தாய்மார்களையும் உட்படுத்தி இராணுவத்தினரின் இந்த தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை இடம்பெற்றது.
நிந்தவூரின் 25 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும், பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் கண்டறியப்பட்டு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றலை மேற்கொண்டனர்.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் மற்றும் கொவிட் ஒழிப்புக்கான நிந்தவூர் செயலணி முக்கியஸ்தர்கள் நடமாடும் சேவையின் போது பிரசன்னமாகி முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
இதேவேளை இராணுவ 241 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி உட்பட இராணுவ உயரதிகாரிகளும் இந்த நடமாடும் சேவையை நேரில் வருகை தந்து கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்