
posted 19th August 2021

“அஞ்சல் திணைக்கள உத்தியொகத்தர்கள், ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிகள் முக்கியத்துவமிக்கதாகும். அவர்களது சேவை விதந்து பாராட்டத்தக்கதுமாகும்.”
இவ்வாறு, நிந்தவூர் பிரதம தபாலக பிரதம தபாலதிபரும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கப் பொதுச் செயலாளருமான யூ.எல்.எம்.பைஸர் கூறினார்.
நிந்தவூர் பிரதம தபாலகத்தில் உதவி தபாலதிபராகக் கடமையாற்றி, கல்முனை பிரதம தபாலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.எல்.காலித்திற்கு நிந்தவூர் பிரதம தபாலகத்தில் பிரிவுபசார வைபவம் ஒன்று நடைபெற்றது.
இந்த பிரிவுபசார வைபவத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே பிரதம தபாலதிபர் பைஸர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் தபாலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச உபதபாலதிபர்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் புதிதாகக் கடமையேற்ற உதவிதபாலதிபர் எம்.ஜே.எம்.சல்மானுக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அத்துடன் இடமாற்றம் பெற்ற உதவி தபாலதிபர் எஸ்.எல்.காலித்தின் சேவையைப் பாராட்டி, உபதபாலதிபர் கே.எப்.றிப்காவினால், வைபவத்தில் வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டதுடன், அன்னாருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பிரதம தபாலதிபர் பைஸர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டு மக்களின் அன்றாட அத்தியாவசிய சேவைகளில் அஞ்சல் திணைக்கள சேவைகள் முக்கிய பங்களிப்பை நல்கிவருகின்றன.
இந்த வகையில் மக்களுக்கு சேவை மனப்பாங்குடன் அர்ப்பணிப்பான சேவைகளை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆற்றிவருகின்றனர்.
இன்றைய கொவிட் - 19 வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடும் நிலையிலும் எமது அஞ்சலக சேவைகள் மக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திருப்திகரமாக இடம் பெற்றுவருகின்றன.
எமது அஞ்சலகத்தில் உதவி தபாலதிபராகப் பல வருடங்கள் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற காலித் அவர்கள் மிக நேர்மையான மக்களதும், ஊழியர்களதும் நன்மதிப்பை பெற்ற உத்தியோகத்தர் ஆவார்.
சேவை மனப்பாங்கும், அர்ப்பணிப்பான சேவைகளும் மக்களிடம் திணைக்களத்திற்கு நற்பெயரையே ஈட்டித்தரும். என்பதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்