
posted 23rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஸ்ரீநேசனின் பேட்டி
சர்வதேசத்தின் பார்வையில் ராஜபக்சக்களை விட ரணில் வல்லவர், நம்பகமானவர் என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலை குறித்து அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு.......
கேள்வி
ஜனாதிபதி ரணில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றமையை எப்பபடிப் பார்க்கிறீர்கள்?
பதில்
ராஜபக்சக்களை விட சர்வதேச சமூகத்திடம் ரணில் நம்பிக்கையைப் பெற்றுள்ளார் என்பதை அது காட்டுகின்றது. மேலும், மேற்குலகம் சார்ந்த தாராண்மை வாதத்திற்கான கதவை ரணிலால்தான் திறக்க முடியும் என மேற்குலகம் நினைக்கிறது.
கேள்வி
ரணில் உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்த ஏன் விரும்பவில்லை?
பதில்
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியானது, அத்தேர்தலை நடாத்தினால் படுதோல்வி அடையும் என்பது ஜனாதிபதி ரணிலுக்கு நன்றாகத் தெரியும். அத்தோல்வி அடுத்து வரும் தேர்தல்களையும் பாதிக்கும் என்பது அவருக்கு நன்றாகவே புரியும்.
கேள்வி
தேர்தலை நடாத்த திறைசேரியில் பணம் இல்லை என்கிறாரே ஜனாதிபதி, இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்
அது மக்களுக்குச் சொல்லும் கருத்தாகும். மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அதிகாரிகளால் இயக்கப்படுவது ஜனநாயகத்திற்கு மாறான செயல் என்பதை ஜனாதிபதி அறியாமல் இருக்க மாட்டார்.
கேள்வி
அடுத்து வரும் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட்டால் ரணில் வெல்ல வாய்ப்புள்ளதா?
பதில்
எதிரணிகள் பொதுவான வேட்பாளரை நிறுத்தாவிட்டால் அது ரணிலுக்குச் சாதகமாக இடமுண்டு. மாறாக அனுர, சஜித் இணக்கப்பாட்டுடன் பொது வேட்பாளரை நிறுத்தினால், அது ரணிலுக்குப் பாதகமாக அமையும்.
கேள்வி
நமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும்?
பதில்
தேசிய இனப்பிரச்சினை நியாயமான வழியில் தீர்த்துவிடுதல், ஊழல் மோசடிகள் களையப்படுதல், ஆற்றல் திறமைக்கு வழிவிடுதல், அரசியலுக்குள் இனவாதம் மதவாதங்களைக் களைதல், அறிவியல் பார்வை என்பன பொருளாரத்தை மேம்படுத்த அவசியமான விடயங்களாகும்.
கேள்வி
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க வழியுண்டா?
பதில்
உள்நாட்டுப் பொறிமுறை இல்லை என்பது 74 ஆண்டுகள் காலப் படிப்பினையாகும். ஆயின், மூன்றாம் தரப்பின் நியாயமான தலையீடு அவசியமாகும். அதாவது சர்வதேசப் பொறிமுறை அவசியமானது.
கேள்வி
சிங்கள அடிப்படைவாதிகள் 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தையே ஒழிக்க முனைகின்றார்களே?
பதில்
சிங்களப் பேரினவாதம் தமிழர்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவே கருதுகின்றது. ஒற்றையாட்சி என்னும் பொறிக்குள் தமிழர்களை ஒடுக்கவே நினைக்கிறது. சிங்கள மேலாதிக்கம் பாரபட்சம் காட்டுகிறது.
கேள்வி
டக்ளஸ், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் சிங்களத் தலைவர்களுடன் இணக்க அரசியல் செய்யலாம் என்கிறார்களே?
பதில்
அவர்கள் தாம் உழைப்பதற்கும், பிழைப்பதற்கும் சிங்கள அதிகார வர்க்கத்துடன் இணைகின்றார்கள். அவர்களால் தமிழ் மக்களுக்கான எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. இன அழிப்பு, கலாசார அழிப்பு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகள் பிரச்சினை, கைதிகள் பிரச்சினை, கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரச்சினை என்று எதனையும் இவர்களால் தீர்க்க முடியவில்லை.
கேள்வி
வெள்ளை வான் கடத்தல், காணாமல் ஆக்கியமை தொடர்பாக ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நெருக்கமான வழிகாட்டி அஸாத் மெளலானா, பிள்ளையான் பற்றிய பல மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் சாட்சியம் அளித்துள்ளாரே?
பதில்
பிள்ளையானின் வழிகாட்டியாக, ஊடக அறிக்கையாளராக, அரசியல் போதனையாளராக இருந்தவர் அவர். பல கொலைகளோடு பிள்ளையான் தொடர்புபட்டதாகவும், கடத்தல், காணாமல் ஆக்கியமை போன்ற மனித உரிமை மீறல்களை படையுடன் இணைந்து செய்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றிய விளக்கத்தை பிள்ளையான் தான் கூறவேண்டும். அவர் நிச்சயமாக மறுப்பார். எதிர்காலம் இதற்கான பதிலைத்தரும்,
.
கேள்வி
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிக்கக் காரணம் என்ன?
பதில்
அதிகார வர்க்கம் தமக்கு வேண்டியவர்களைக் கொண்டு குற்றங்களைச் செய்விப்பதையும், பின்னர் அவர்களைப் பாதுகாப்பதையும் காண முடிகின்றது. மேலும், பாரிய ஆபத்தான மரண தண்டனைக் குற்றவாளிகளை ஜனாதிபதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். சில அரசியல்வாதிகள் கறுப்புப் பணம் உழைப்பதற்கு பாதாள உலகக் கும்பலைப் பயன்படுத்துவதாாவும் பேசப்படுகிறது. கொலைகளும் செய்விக்கிறார்கள். கையூட்டுகள் மூலம் குற்றவாளிகள் தப்பியும் கொள்கிறார்கள். இதனால் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.
கேள்வி
ரணில் கொண்டுவரவுள்ள ஊழலுக்கு எதிரான சட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்
நல்ல விடயம் வரவேற்கின்றேன். ஆனால், சட்டம் போட்டுத் தடுக்கின்ற கூட்டம் தடுத்தாலும் திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடவே செய்யும்.
கேள்வி
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றி என்ன கூறவுள்ளீர்கள்?
பதில்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நான் அறிந்தவரை புதிய பாத்திரத்தில் பழைய கள் ஊற்றப்படுவதாகவே கொள்கின்றேன். சட்டவாதிகளின் கருத்துப்படி பழைய சட்டத்தை விடவும் புதிய சட்டம் கடுமையானது என்பதாக பேசப்படுகின்றது என்று தனது கருத்துக்களை இரத்தினச் சுருக்கமாக தெரிவித்தார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)