
posted 24th April 2023



தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள - பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதேவேளை நாளை ஹர்த்தால், கடையடைப்பு – முழுமுடக்கம் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் பெருமக்களே!
எமது மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்!
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளானார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்கள் இதே சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு இன்னமும் வதைமுகாம்களில் வாடுகின்றார்கள். கொழும்பில் அரசிற்கு எதிராக நடைபெற்ற அரகலிய போராட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள இளைஞர்களும் இதே சட்டத்தின்கீழ் கைதானார்கள்.
இப்பொழுது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில், முன்னரையும்விட மிக மோசமான சட்டம் வரவிருக்கின்றது. அது நிறைவேற்றப்பட்டால், பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகப் போராட்டங்கள், ஊடகங்களின் குரல் அனைத்தும் நசுக்கப்படும். அடிப்படை உரிமைகளையே மறுதலிக்கக்கூடிய அச்சட்டத்தை வடக்கு-கிழக்கு மக்கள் முற்றாக நிராகரிக்கின்றார்கள் என்பதை அரசிற்கு வெளிப்படுத்தவும்,
வடக்கு - கிழக்கு பிரதேசங்களை பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சிநிரலை உடன் நிறுத்துமாறு கோரியும் 25.04.2023 செவ்வாய்க்கிழமை வடக்கு-கிழக்கின் சகல பிரதேசங்களிலும் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவளித்து சந்தைகளை மூடுமாறும் கடைகளை அடைக்குமாறும் போக்குவரத்து சேவையை நிறுத்துமாறும் அழைப்பு விடுக்கின்றோம். அத்துடன் அரச, அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் படியும் கோருகின்றோம்.
அதேசமயம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், அமைதியான முறையில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய இலங்கை அரசாங்கம், அதற்கு நேரெதிராக குழப்பங்களையும் பிரச்சினைகளையும் அதிகரித்தே செல்கின்றது.
- முப்படையினர் எமது காணிகளைக் கபளீகரம் செய்கின்றார்கள்.
- வன இலாகா தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை சுவீகாரம் செய்கின்றது.
- மகாவலி அபிவிருத்திச்சபை தமிழர்களின் காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்றது.
- தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் தொன்மைமிக்க சிவாலயங்களை இடித்து அதன்மீது புத்த கோவில்களைக் கட்டுகின்றது.
- கிழக்கில் மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.
- யுத்தத்தின் பின்னர் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பெருமளவில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு, தமிழ்க் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்படுகின்றன இவை அனைத்தும் அரசின் ஆதரவுடனேயே நடைபெற்று வருகின்றன.
- கன்னியா வெந்நீரூற்று தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
- குருந்தூர் மலையில் ஆதிசிவன் குடிகொண்டிருந்த தொன்மை மிக்க சிவாலயம் இடிக்கப்பட்டு நீதிமன்றத் தடையையும் மீறி புத்தகோயில் கட்டப்பட்டுள்ளது.
- வெடுக்குநாரி மலையில் சிவலிங்கமும் ஏனைய கடவுளின் விக்கிரகங்களும் அவமதிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
- அண்மையில் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழும் கிண்ணியாவிலும் புத்தர் சிலை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- திரும்புமிடமெல்லாம் புதிய புதிய புத்த கோயில்கள் உருவாகின்றன. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையிலும் புத்தகோயில் கட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
- பௌத்தத்தின் ஆக்கிரமிப்பு கச்சத்தீவையும் விட்டுவைக்கவில்லை.
ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கெங்கிலும் பௌத்த சிங்கள மயமாக்கல் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் பலவழிமுறைகளில் செயற்படுத்தி வருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் கூட, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்பு போன்றவை மிக வேகமாகச் செயற்படுத்தப்படுகின்றன.
- பறித்தெடுக்கப்பட்ட, கபளீகரம் செய்யப்பட்ட அனைத்து காணிகளும் மீள ஒப்படைக்கப்படவேண்டும்.
- தமிழரின் புராதான கோயில்கள் மீளவும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அதனைப் புனரமைத்து, பராமரித்து வணங்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும்.
- அனைத்து வடிவிலான காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்படவேண்டும்.
அரசாங்கத்தின் இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை தமிழ்பேசும் மக்கள் ஒருமித்து கண்டிக்க வேண்டும் என்பதுடன், அதனைத் தட்டிக்கேட்கவும் வேண்டும். ஏனோதானோ என்று நாம் இருந்துவிட்டால், ஒருசில வருடங்களில் எமது காணி, நிலம், கோயில், கலாசாரம், பண்பாடு, மொழி அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். எமது சொந்த இடத்தில் இருந்து எம்மை விரட்டுவதே அரசின் நோக்கம். இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். எமது விடுதலைக்கான வேள்வியில் பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் நாம் ஆகுதியாக்கியுள்ளோம். இப்பொழுது எமது இருப்பைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.
வருகின்ற 25.04.2023 செவ்வாய்க்கிழமை வடக்கு-கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்தை மேற்கொண்டு, எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் இலங்கை அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரியப்படுத்துவோம்.
மௌனமாகவும் பார்வையாளராகவும் இருக்கும் இனங்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை, நாமும் எமது எதிர்கால சந்ததியும் இம்மண்ணில் தமிழ்பேசும் மக்கள் என்னும் அடையாளத்துடன் வாழ வேண்டும். அதற்காக பேதங்களை மறந்து ஒன்றுதிரள்வோம். வெற்றி கொள்வோம்.
அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை! உரிமைப் போர்கள் தோற்றதாக உலகம் இதுவரை இகட்டதில்லை!!
தமிழ்த் தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)