
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
மீளவும் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம்
வவுனியா - நெடுங்கேணி - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் புதிய விக்கிரகங்கள் வெள்ளிக்கிழமை (28) பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் அகத்தியர் சுவாமிகள், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் குருமுதல்வர் வேலன் சுவாமிகள் ஆகியோருடன் பக்தர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தனர்.
பிரதிஷ்டை செய்வதற்கான விக்கிரகங்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலையில் அவற்றை பக்தர்கள் தமது தோள்களில் சுமந்தவாறு குன்றின்மீது கொண்டு வந்து சேர்த்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பௌத்த தொல்லியல் இடம் என்று கூறி தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த மார்ச் 26ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன. அத்துடன் சில சிலைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த நிலையில், உடைக்கப்பட்ட விக்கிரகங்களுக்கு பதிலாக புதிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கு ஆலய நிர்வாகம் முயன்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதன்போது, மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆலயத்தில் பூசை வழிபாடுகள் தொல்பொருள் திணைக்களத்தால் தடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் முன்னரே வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடந்த வழக்கில் பூசை, வழிபாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து வியாழக் கிழமை நடந்த வழக்கில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கு தொல்பொருள் திணைக்களம் ஆட்சேபனை தெரிவித்திருக்கவில்லை. இதையடுத்து, விக்கிரகங்களை மீளவும் பிரதிஷ்டை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (28) விக்கிரகங்கள் மீளபிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)