
posted 7th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பலவகைச் செய்தித் துணுக்குகள்
தனிமையில் சீவிப்பவர்கள் குறிவைக்கப்படும் விதம் - அவதானம் அவசியம்
சமுர்த்தி உதவிக் கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த சிறப்புத் தேவையுடைய வயோதிப பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி வளலாயில் நேற்று (06) வியாழக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தனிமையில் வசிக்கும் அந்தப் பெண் தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தங்களுக்கு தற்போது வழங்கப்படும் சமுர்த்தி உதவித் தொகையை அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கத்தால் இரட்டிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்திப் பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அறவிடுகிறோம் என்று தெரிவித்த அந்த நபர் நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறியுள்ளார்.
தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என்று வயதான பெண் தெரிவித்துள்ளார். பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்த அந்த நபர் வலுக்கட்டாயமாக பணத்தைப் பெற்றுள்ளார்.
“வந்திருப்பவர் முகக்கவசத்தை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததார். அதனால் எனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்டது. எனினும் பணத்தை வழங்காவிட்டால் எனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. பணத்தை வழங்கிவிட்டு அலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என்று முயற்சித்தபோது எனது அலைபேசியும் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்தது” என்று பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை, கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவுகளை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
வைத்தியர்கள் இன்மையால் மூடப்படும் பிரிவுகள்
அநுராதபுர போதனா மருத்துவமனையில் குழந்தை நல பிரிவுகள் மூடப்பட்டமை போன்ற நிலைமை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் ஏற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் த. மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) யாழ். போதனா மருத்துவமனையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் நல பிரிவுகள் இருந்தன. இதில் இரு பிரிவுகள் மருத்துவர்கள் இன்மையால் அண்மையில் மூடப்பட்டன. இதனால், பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. மருத்துவபீட மாணவர்களின் கல்விக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ். போதனா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் நல பிரிவுகள் உள்ளன. இங்கும் மருத்துவபீட மாணவர்கள் கற்கிறார்கள். தற்போது வரை இங்கு அவ்வாறான பிரச்னை இல்லை. எனினும், எதிர்காலத்தில் ஏற்படலாம். இது நோயாளர்களுக்கு மட்டும் சிக்கலாக இருக்காது. மருத்துவத் துறைக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும்.
இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் மாவட்ட பொது மருத்துவமனைகள், ஆதார மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றில் சில மருத்துவமனைகளில் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இல்லை. சில மருத்துவமனைகளில் ஒருவரே கடமையில் இருக்கிறார். குறைந்தது ஒரு மருத்துவமனைக்கு இரு மருத்துவர்கள் தேவைப்படும் நிலையிலேயே ஒருவர் மட்டும் சேவையில் இருக்கிறார். இதனால், நோயாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கம் மருத்துவர்களின் வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். அதற்கு நாம் அவர்களுக்கு வழங்கியுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவன் மின்சாரம் தாக்கி மரணம்
மின்சாரம் தாக்கி உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கொக்குவில் குளப்பிட்டியில் நேற்று முன்தினம் புதன் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோகனதாஸ் கிஷோத்மன் (வயது 17) என்பவரே உயிரிழந்தார்.
தனது வீட்டில் மின் அழுத்தியை மின் இணைப்புடன் பொருத்த முற்பட்ட வேளையே அவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கானார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிய வருகின்றது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)