பலவகைச் செய்தித் துணுக்குகள் (13.04.2023)

கர்ப்பவதியைக் காயப்படுத்திய கணவன்

கர்ப்பவதியான மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய கணவனை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அக்கராயன்குளம் - கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் (11) செவ்வாய் மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,

காயமடைந்த பெண்ணும் காயத்தை ஏற்படுத்தியவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கணவர் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான சண்டையின்போதே 5 மாத கர்ப்பவதியான தனது மனைவியை இடியன் துப்பாக்கியால் கணவர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பெண் 33 வயதுடையவர் என்பதுடன் 2 பிள்ளைகளின் தாயும் ஆவார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் அக்கராயன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனது மனைவியையே சுட்ட 40 வயதான நபரை அக்கராயன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ஹெரோயினுடன் பெண் கைது

யாழ்ப்பாணம்ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய் (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.



'நூறு மலர்கள் மலரட்டும்'

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டையொட்டி 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக மாதாந்தம் நடத்தப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் பத்தாவது நிகழ்வு கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) காலை 9 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5 மணி வரை இரு தினங்கள் இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாபெரும் புத்தகக் கண்காட்சியும், மலிவு விற்பனையும் நடைபெறவுள்ளன. மாலை 4 மணியளவில் ஈழத்து நூல்களை அறிவோம் என்ற தலைப்பில் நூல்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வானது எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் நினைவு அரங்கில் அதிபரும், சமூக செயல்பாட்டாளருமான ச. செல்வானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் நூல் அறிமுக உரைகளை சிவ. ஆரூரனின் ஊமை மோகம் நூல் தொடர்பாக ஆசிரியரும் ஆய்வாளருமான கலாநிதி சு. குணேஸ்வரன், வெகுஜனன், இராவணா என்ற புனைபெயர்களில் சி. கா. செந்திவேல், கலாநிதி ந. இரவீந்திரன் ஆகியோர் இணைந்து எழுதிய இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் நூல் பற்றி யாழ். பல்கலைக்கழக சமூகவியல் துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ர விரிவுரையாளருமான இ. இராஜேஸ்கண்ணன், எஸ்தரின் பெருவெடிப்பு மலைகள் புத்தகம் பற்றி ஆசிரியரும் ஆய்வாளருமான சி. ரமேஸ், ந. மயூரரூபனின் எழுத்தின் இயங்கியல் நூல் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ர விரிவுரையாளர் தி. செல்வமனோகரன், அழ. பகீரதனால் தொகுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக ஆய்வாளர் சி.விமலனும் ஆற்றவுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பை கலைவாணி கமலநாதன் மேற்கொள்ளவுள்ளார்.

ஆர்வமுள்ள அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கிய பேரவையினர் அழைப்பு விடுக்கின்றனர்.



தேர்த் திருவிழா

நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா சித்திரை வருடப்பிறப்பு தினமான நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில், இன்று (13) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சப்பைரதத் திருவிழா நடைபெறும்.

நாளை (14) தேர்த் திருவிழாவை தொடர்ந்து நாளை மறுதினம் சனிக்கிழமை (15) காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.


பலவகைச் செய்தித் துணுக்குகள் (13.04.2023)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)