
posted 9th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறைக் கைதிகளுக்கு நூலகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று நேற்று சனிக்கிழமை (08) காலை 10:00 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபாட்டு வருகின்ற நிலையில் பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஒரு அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பம், ஐ.பி.சி தமிழ் மற்றும் தன்னார்வலர்கள், யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, யாழ்.பிரதேச செயலர் சா. சுதர்சன், யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார,யாழ் சிறைச்சாலை ஜெயிலர் ஹேரத், யாழ். பல்கலைக்கழக உதவி நூலகர்கள்,யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை மருத்துவர், கைதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ். பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)