
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்
சம்மாந்துறை பள்ளிவாயல் நிர்வாக தெரிவு கூட்டத்தின் போது ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இவற்றை தீர்க்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபியவர்கள் காலத்தில் பள்ளிவாயலுக்கென நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவில்லை. பள்ளி இமாம் ஒருவர் நியமிக்கப்படுவார். அவரே நிர்வாகியாகவும் இருப்பார். அவரின் தேவைகள், பள்ளிவாயல் விடயங்களை மக்கள் பார்த்துக்கொள்வர். பள்ளிவாயலை கட்டக்கூடிய மக்கள் எத்தகைய தகுதி கொண்டவர்கள் என்பதை இஸ்லாம் தெளிவு படுத்தியுள்ளது.
பிற்காலங்களில் நிர்வாகங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்று அவை பாராளுமன்றத்துக்கு போட்டியிடுவது போன்ற அடிபிடி, சண்டை, கொலை என மாறியுள்ளது.
உண்மையான இறைவிசுவாசி பள்ளி நிர்வாக சபையில் இருக்க மாட்டான். அது ஒரு அமானிதம். அதை தன்னால் நேர்மையாக செய்ய முடியும் என்பவன்தான் அதை பொறுப்பெடுப்பான். ஆனால், சமூகத்தின் அரசியல் போல் பெரும்பாலான பள்ளிவாயல் நிர்வாகங்களும் நேர்மையற்றதாகவும், பள்ளிவாயல் சொத்தை கொள்ளையடிப்பவர்களாகவும் உள்ளது கவலையான விடயம்.
நமது நாட்டில் பள்ளிவாயல் நிர்வாக சபை தெரிவு விடயத்தில் அரசாங்க வக்பு சபை தலையிட அதற்கு அதிகாரம் இல்லை. நிர்வாக சபையில் பிரச்சினை ஏற்பட்டால் அதை விசாரிக்க மட்டுமே அவர்களால் முடியும். அதிலும் அரசியல் நுழைந்துள்ளது.
ஆகவே, பள்ளிவாயல்கள் நிர்வாகத்தை தெரிவு செய்யும் முறையில் குர்ஆன் ஹதீதுக்கேற்ப சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பள்ளி இமாம் என்பவர் பல்துறையில் கற்றவராகவும், மார்க்க அறிவுடன் ஏதாவதொரு பல்கலைக்கழக பட்டதாரியாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் கட்சி ரீதியாக 2005 முதல் சொல்லி வருகிறோம்.
அத்தகைய இமாம் பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவராக இருக்க வேண்டும். இமாம்களை, அரசு (முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்) நியமிக்க வேண்டும். அந்த இமாம்களுக்கான நியமனம் என்பது போட்டிப் பரீட்சை மூலம் வழங்கப்பட வேண்டும். சம்பளம், இட மாற்றம் சலுகைகள் என்பனவும் திணைக்களம் மூலம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதியை ஒவ்வொரு பள்ளியும் குறிப்பிட்ட தொகையை திணைக்களத்துக்கு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் சொல்லி வருகிறோம்.
இவற்றை நடை முறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் மூலமான அரசியல் அதிகாரத்தின் மூலமே முடியும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)