
posted 9th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காஸிம் மௌலவி நினைவாக இப்தார் நிகழ்வும் துஆப் பிராத்தனையும்
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத் தலைவராகவும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றி, அண்மையில் காலம்சென்ற ஹஸ்ரத் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் நினைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் விஷேட துஆப் பிரார்த்தனையும் சனிக்கிழமை (08) கலாபீட மண்டபத்தில் நடைபெற்றது.
தஃவா இஸ்லாமிய கலாபீட ஆளுநர் சபையின் பதில் தலைவர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது அல்ஹாபிழ் மௌலவி எம். பாஹிம் விஷேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார். அத்துடன் கலாபீடத்தின் தேவைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலாபீட மாணவர்கள், போதனாசிரியர்கள், உலமாக்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், காஸிம் மௌலவி அவர்களின் புதல்வர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாட ஆசிரியராக, பிரதி அதிபராக, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பிரதித் தலைவராக, பைத்துஸ் ஸகாத் நிதியம், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடம், சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை என்பவற்றின் தலைவராகவும் இருந்து, பன்முக ஆளுமைகளுடன் கல்வி, சமூக, கலாசார, இஸ்லாமிய ஆன்மீக மேம்பாட்டுக்காக தியாக மனப்பாங்குடன் பெரும்பங்காற்றி வந்த அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியன்று இறையடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)