
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஈஸ்டர் தாக்குதல்
ஈஸ்டர் தாக்குதல் நடந்து நான்கு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இதனை செய்தவர்கள் தவிர இவர்களை செய்வித்தவர்கள் யார் என்பது இன்னமும் சரியாக கண்டு பிடிக்கப்படவில்லை.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தவ்ஹீத் கொள்கையால் உந்தப்பட்டவர்கள் திட்டமிட்டு தற்கொலை தாக்குதல் நடத்தியதாகவே முழு உலகும் நம்பியது. ஆனாலும், இந்தளவுக்கு தற்கொலை குண்டுகளை உருவாக்கும் அளவு இலங்கை முஸ்லிம்களுக்கு மூளை இல்லை என்ற சந்தேகம் இருந்தது. இவ்வாறான தற்கொலை குண்டுகளை உருவாக்கும் ஆற்றல் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்குமே உண்டு.
இந்தப்பின்னணியில் இதில் ஈடுபட்ட ஸஹ்ரான் என்பவர் தவ்ஹீத் பெயரில் உள்ள இயக்கத்தின் தலைவர் என்பதால் தவ்ஹீத் பிரச்சாரம்தான் இப்படியான தற்கொலை தாக்குதலுக்கு காரணம் என ஊடகங்கள் மூலம் சொல்லப்பட்டதுடன் தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் தடை செய்யப்பட வேண்டும் என இலங்கை முஸ்லிம்களில் பலர் அன்றைய நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
தவ்ஹீத்வாதிகள் உலக மகா கோழைகள் என்றும், அவர்களால் இந்தளவுக்கு முடியாது என்றும் தவ்ஹீத்வாதிகள் தமக்குள்ளும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் மோதிக்கொள்வதில்தான் வீரர்கள் என்றும் இதன் பின்னால் மறைகரங்கள் உள்ளன என்றும் நாம் கூறினோம். யாருமே கேட்கவில்லை.
அதைத்தொடர்ந்து கோட்டாபய ஆட்சிக்கு வந்த போது ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அள்ளாஹ்தான் என ஞானசார தேரர் முட்டாள்தனமாக ஒரு போடு போட்டார். அதே போல் தவ்ஹீதின் மீதும் பழி போட்டார். அதை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ தவ்ஹீத் ஜமாஅத்துக்களையும் தவ்ஹீத் அல்லாத சில ஜமாஅத்துக்களையும் தடை செய்தார். இதை தவ்ஹீத் அல்லாத முஸ்லிம்கள் பெரிதும் வரவேற்றனர். சிலர் இதற்காக ஞானசார தேரரை பெரிய "அவுலியா" போல் வரவேற்றனர். அவரிடம் சென்று இன்னும் கொஞ்சம் மூட்டியும் விட்டனர். ஆனாலும், நடுநிலை முஸ்லிம்கள் பொறுமை காத்ததுடன் இறைவனிடம் பாரப்படுத்தினர்.
முஸ்லிம்கள் அவமானப்பட்டுப்போயிருந்த இந்த சந்தர்ப்பத்தில் ஞானசார போன்ற இனவாதிகளையும், ஐரோப்பிய பணத்துக்கு அலையும் சில முஸ்லிம் பெண்களையும், அமைப்புக்களையும் திருப்திப்படுத்த முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் நோக்கில் ஞானசாரவின் தலைமையில் ஒரே சட்டம் என்ற ஆணைக்குழுவை நியமித்தார் கோட்டாபய. இதில் தவ்ஹீத் எதிர்ப்பு முஸ்லிம்களையும் உறுப்பினராக்கினார். இதன் மூலம் ஞானசாரவுக்கு "எலும்புத்து,ண்டு" வழங்கப்பட்டு அதிலேயே அவரை ஈடுபடுத்தியதால் அவர் வேறு விசயங்கள் பேசுவதில் இருந்து ஒதுங்கிய நல்ல சூழலும் ஏற்பட்டது.
அத்துடன் கோட்டா ஆட்சிக்கு ஒத்துழைத்த நாம் சொல்லியும் கேளாமல் இனவாத சுகாதார அலுவலர்கள் மற்றும் சில தேரர்களின் முட்டாள்தனமான பேச்சைக் கேட்டு கொரோனா ஜனஸாக்களை எரித்தார் கோட்டாபய. இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ போன்ற அரசியல்வாதிகளின் அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லை. இது பெரும் தவறு என்பதை நாம் அரசுக்கு சுட்டிக்காட்ட தவறவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ இப்படியான முஸ்லிம் எதிர்ப்பு வேலைகளைத்தான் பார்த்தாரே தவிர நாட்டை வளப்படுத்த முயலவில்லை. இதனால் அவர் நாட்டை விட்டு ஓடும் கேவலமான நிலை ஏற்பட்டது.
இப்போது ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் பிள்ளையான் மற்றும் கோட்டாபாய உட்பட இராணுவத்தினர் சிலர் என பிள்ளையானின் செயலாளராக நீண்ட காலம் இருந்த மருதமுனையை சேர்ந்த ஆஸாத் மௌலானா என்பவர் வெளிநாட்டுக்கு ஓடிச்சென்று அங்கிருந்து சொல்லியுள்ளார். அத்துடன் இது தற்கொலை தாக்குதல் அல்ல ரிமோட் கன்ட்ரோல் தாக்குதல் என்றும் கூறியுள்ளார். அதாவது குண்டை வைத்துவிட்டு வந்தால் போதும் என்றே முஸ்லிம் வாலிபர்கள் சொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டை கொண்டு சென்று வைக்கும் முன் வெளியில் இருந்து ரிமோட் கன்ட்ரோலில் இயக்கியதாக மௌலானா கூறியுள்ளார். அப்படியாயின் இது தற்கொலை தாக்குதல் அல்ல, திட்டமிடப்பட்ட குண்டுத்தாக்குதல் என்பதை புரியலாம்.
இவர் உண்மை பேசுகிறாரா அல்லது தஞ்சம் புகுந்துள்ள நாட்டில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான புலம் பெயர் தமிழர்களின் நன்மதிப்பை பெற இப்படி சொல்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கு இன்று வரை பிள்ளையானோ கோட்டாவோ பதில் தந்ததாக காணவில்லை.
ஸஹ்ரான் கோஷ்டியை தயார் படுத்தியதில் கோட்டாவுக்கும் இராணுவத்தினர் சிலருக்கும் சம்பந்தம் உண்டா என்பது இன்னமும் நிரூபிக்கப்படாவிட்டாலும் அது பற்றி ஆராயும் கடமை அரசுக்குள்ளது.
இந்த நிலையில் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி என ஊடகங்களால் சொல்லப்பட்ட புலஸ்தினி சாரா காணாமல் போய் இப்போது அவரும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என அரசு கூறியுள்ளது. புலஸ்தினியை இயக்கியது இந்தியாவின் றோ என சில ஊடகங்கள் சொன்னாலும் அதுவும் இன்னமும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.
கூட்டிக்கழித்து பார்க்கும் போது இக்குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதல் அல்ல, மாறாக பலர் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல் என்பது தெரிகிறது.
ஆக மொத்தத்தில் இக்குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவே தெரிவதால் இதன் பின்னணியில் யார் இருந்து இயக்கினார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. மர்மம் துலக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)