
posted 5th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆளுநரினதும், அரசாங்கத்தினதும் சூட்சுமத்தை வெளிக்கொணர்ந்த கலையரசன்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள உறுப்பினர் ஒருவரை உருவாக்கவே மாதவனை மயிலந்தனை சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. இதற்கு ஆளுநர் உரம் போடுகிறார்,” இவ்வாறு தெரிவித்தார் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கே இதுவரை சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ இல்லை. எதிர்காலத்தில் அங்கு சிங்கள உறுப்பினர் ஒருவரை உருவாக்குவதற்காகவே தமிழ் மக்களின் விவசாய பிரதேசமான மாதவனை மயிலந்தனையில் சிங்கள குடியேற்ற திட்டத்தை ஆளுநர் தொடக்கம் அரசாங்கம் வரை செய்து வருகிறது.
யுத்தம் மௌனித்து 14 வருடங்கள் முடிந்து விட்டது . ஆனால் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எதனையுமே செய்து முடிக்கவில்லை.
இந் நிலையில் எங்கள் மீது பலர் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் வீதி போட்டுத் தருவோம், வீடு கட்டித் தருவோம் என்று வாக்கு கேட்டதில்லை. நாம் தந்தை செல்வா வழியிலே அஹிம்சை வழியில் உரிமைகளை பெற ஒற்றுமையாக அரசியல் பயணத்தில் பயணிக்கின்றோம். எமது தமிழ் மக்கள் சொந்த மண்ணிலே சுதந்திரத்துடன் வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் அகிம்சை வழியில் போராடி வருகின்றோம்.
சிங்கள பேரினவாதம் ஜனநாயகம் என்ற போர்வையில் அதனை திட்டமிட்டு நாசூக்காக சிங்களவர்களை குடியேற்றுவதற்கு ஆளுநரைப் பயன்படுத்தி வருகின்றது.
மாதவனை மயிலந்தனைப் பகுதியில் தமிழர்கள் காணியை அடாத்தாக பிடித்து சிங்களவர்களுக்கு கொடுப்பதற்கு காணி அளக்கப்பட்டு வருகின்றது.
இன்று தமிழ் மக்களின் பிரச்னை தீர்ப்போம் என்று ஜனாதிபதி ரணில் முன்வந்திருக்கின்றார். உண்மையில் அவர் அப்படி செய்வாராக இருந்தால் இலங்கை அரசியல் அரங்கில் ஒரு பொருத்தமான நீதியான மாபெரும் தலைவர் ரணில் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
துரதிஷ்டவசமாக இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். அதன் காரணமாகவே தமிழ் மக்களால் யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)