
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அலி ஸாஹீர் மௌலானா கவலை
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, ஏறாவூரில் உள்ள பிரதான வீதியொன்றின் பெயரை மாற்றுவது தேவையற்றமுறையில் இனங்களுக்குடையே ஒரு பதற்றத்தைத் தூண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அலி ஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.
காலியைச் சேர்ந்த மறைந்த வர்த்தகர் ஒருவரின் நினைவாக அஞ்சலி செலுத்தும் போர்வையில் ஏறாவூரில் உள்ள பிரதான வீதியொன்றின் பெயரை இங்குள்ள மக்களுடன் கலந்தாலோசிக்காமல் பெயர் மாற்றம் செய்வது கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புன்னைக்குடா வீதியானது ஏறாவூரின் இதயம் போன்று ஊரின் மத்திய பகுதியினூடாக செல்லும் ஒரு பிரதான வீதியாகும். இது ஏ-15 நெடுஞ்சாலையை புன்னைக்குடா கடற்கரையுடன் இணைக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டை உள்வாங்குவதற்காக, முதலீட்டு சபையினது முதலீட்டலுடன் ஏறாவூர் புன்னைக்குடாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுவரும் புடவை உற்பத்தி வர்த்தக வலயத்துக்கு (பேப்ரிக் பார்க்) சென்றடையக்கூடிய அணுகல் பாதையும் இதுவாகும் .
இங்கு வாழும் மக்களதும், மற்றும் இந்த பிரதேசத்தில் அங்கம் வகிக்கின்ற முக்கிய பங்குதாரர்கள், நிறுவனங்களினதும் கலந்தாலோசனைகளும் இன்றி ஒருதலைப்பட்சமாக இந்த முக்கியமான பிரதான வீதியின் பெயரை மாற்றுவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “வியத்மக” என்ற கும்பலில் ஒருவர் என்ற தகுதியால் ஆளுனர் நியமனம் பெற்ற அனுராதா யஹம்பத்தின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வெளிப்பாடே தவிர வேறொன்றம் இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்றே மாண்புமிக்க வரலாறும், பாரம்பரியமும் உண்டு.
ஒரு நபரை, ஓர் இடத்தை, ஒரு பொருளை நினைவு கூறும் வகையில் ஒரு வீதிக்கு பெயரை சூட வேண்டுமானால், அதைத் தீர்மானிக்க வேண்டிய தகமையை அப்பிரதேச குடியிருப்பாளர்களிடமோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளிடமோ இருக்க வேண்டும்.
தவிர, இனரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய நினைத்த ஜனாதிபதியால் ஆளுனராக நியமிக்கப்பட்ட கொழும்பிலே, ஓர் அலட்சியமான ஆடை வடிவமைப்பாளாராக தன்னைச் சந்தைப்படுத்தியவரால் அல்ல.
ஏறாவூர் மக்கள் சார்பாக, இந்த வீதியின் பெயரை மாற்றுவதற்கான தான்தோன்றித்தனமாக விடுத்துள்ள தவறான உத்தரவை உடனடியாக இரத்து செய்யுமாறு கண்டனத்துடன் கோருகிறோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)