
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
3 தமிழ் அரசியல் கைதிகள் 14 வருடங்களின் பின்பு விடுதலை
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்றுதிங்கள் விடுவிக்கப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த திருவருள், சுலக்சன், தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுவித்து விடுதலை செய்தார்.
இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த திருவருள் (வயது 45), சுலக்சன் (வயது 34), தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்பு காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியனால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மிக நீண்ட காலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)