மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்க வாசகம் மறைவு
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்க வாசகம் மறைவு

பேனாவின் இதயம் நின்றுவிட்டதோ? ஓய்வெடுக்கச் சென்றனையோ, உன்னவர்கள் கதறுகையில் உன் சேவை மீளுயிர் பெறுகையிலே அதிலுன்னை இவ்வுலகு பார்த்தே நிற்கும். அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்க வாசகம் மறைவு

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், லண்டன் பி.பி.சி, ரொய்ட்டேஸ், வீரகேசரி ஊடகவியலாளருமான, வவுனியாவைச் சேர்ந்த பொன்னையா மாணிக்க வாசகத்தின் மறைவு குறித்து பல்வேறு தரப்பினரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று 12ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை சுகயீனமுற்றிருந்த நிலையில், அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.

ஊடகத்துறை, பேராளுமையாகவும், வவுனியாவின் அடையாளமாகவும் திகழ்ந்த அன்னாரது இறுதிக் கிரியைகள் வவுனியா வைரவப்புளியங்குளம் - 10ஆம் ஒழுங்கையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை 13ஆம் திகதி காலை ஆரம்பித்து தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவையொட்டி உள்நாட்டு ஊடக அமைப்புக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உட்பட புலம் பெயர்ந்துள்ள ஊடகவியாலாளர்கள், முக்கியஸ்த்தர்களும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்;

ஊடகத்துறை பேராளுமை பொன்னையாமாணிக்க வாசகத்தின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகுமென கவலை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம், இணைச் செயலாளர் செல்லையா பேரின்பராசா ஆகியோர் இணைந்து இந்த அனுதாபச் செய்தியை விடுத்துள்ளனர்.

இந்த அனுதாபச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்றுணிவுள்ள பேனா முனைப் போராளியை நாம் இன்று இழந்துள்ளோம். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பேரினவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழினத்தின் விடிவுக்கான குரலாக அவர் திகழ்ந்தார்.

குறிப்பாக மூன்று தசாப்தகால யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்களின் அவலங்களை, துன்ப துயரங்களை இழைக்கப்பட்ட அநீதிகளை தற்றுணிவுடன் உலகறியச் செய்த பேனா முனைப் போராளியாகத் திகழ்ந்தார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்குப் பலம் சேர்த்த அமரர் மாணிக்கவாசகம் இறுதி வரை அதற்காக அர்ப்பணிப்புடன் பங்காற்றினார்.
அவரது மக்கள் நலன் சார்ந்த மற்றும் அரசியல் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வந்தன.

ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் கலாபூசணம் விருது உட்பட பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற அவர்,
கால அதிர்வுகள், வாழத்துடிக்கும் வன்னி, மாற்றத்தை நாடும் மற்றுத் திறனாளிகள் எனும் மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட மூத்த ஊடகர் மாணிக்க வாசகம் ஐயாவின் மறைவால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்க வாசகம் மறைவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)