
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்கள் ஆதரவு வழங்குங்கள்
இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் அச்சமும், பாரிய எதிர்ப்பும் கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இல்லாது செய்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இணைந்து மன்னார் ரெலோ அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி கருத்தினை தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது;
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்துவதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ்வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றோம்.
இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறைப்படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த ஆயுதப்படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்களை வழங்கி இருக்கிறது.
உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறைப்படுத்துவதற்கான அதிகாரம், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.
மீண்டும், மீண்டும் எமது மக்களை ஒரு திறந்த வெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
எனவே, இந்த தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர், யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம், சிங்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும்.
அதே போன்று எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அன்றையதினம், வர்த்தக நிலையங்களை மூடி, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், முச்சக்கர வண்டிகள், அரச மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு, இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பினை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த ஊடக சந்திப்பில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)