
posted 8th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூரில் தனியார் வகுப்புக்களை இடை நிறுத்துமாறு கோரிக்கை!
நிந்தவூர் பிரதேத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் (ரியூசன் நிலையங்கள்) புனித நோன்பின் கடைசிப் பத்து தினங்களும் முழுமையாக தனியார் வகுப்புக்களை இடை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் அனுஷ்டிக்கப்படும் புனித நோன்பின் கடைசி பத்தின் மாண்பை பேணும் விதத்தில் குறித்த தனியார் வகுப்புக்கள் இடை நிறுத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர்க்கிளையும், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன.
புனித நோன்பு காலத்தில் தனியார் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள மேற்படி இடை நிறுத்தல் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர்கிளைத் தலைவர் அஷ்ஷெய்க். என்.இஸ்மான் (ஷர்க்கி), நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ்.எம்.பீ.எம். பாறூக் இப்றாகீம் ஆகியோர் ஒப்பமிட்டு விடுத்துள்ள அறிவிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை முதல் மாலை 5 மணி வரை தனியார் (ரியூசன்) வகுப்புக்களை நடத்துவதாகவும், அதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு நிலமைகள் விபரீதம் அடைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வகையில் ரமழான் நோன்பு விடுமுறை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நோக்கிலும், நிலையிலும் இக்காலங்கள் இபாதத் செய்வதற்கும், ஆன்மீக மேம்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்தவும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் வழிகாட்ட வேண்டும்.
எனவே, நோன்பு 20 வரைக்கும் அனைத்து தனியார் வகுப்புகளையும், லுஹர் தொழுகைக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறும், நோன்பு 20 முதல் பெருநாள் வரைக்கும் கடைசிப்பத்தின் மாண்பை பேணும் விதத்தில் முழுமையாக தனியார் வகுப்புக்களை இடைநிறுத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்குமாறும் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களதும் ஒலிபெருக்கிகள் மூலம் இந்த விடயம் தொடர்பான பகிரங்க அறிவிப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)