
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தமிழரசுக் கட்சி தலைமைத்துவங்களின் சிந்திக்க வேண்டிய நேரமிது
“நாம் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஆதரவளித்து வரும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையைச் செய்து எமது உரிமைகளை மற்றும் தேவைகளை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். இதனை தமிழரசுக் கட்சி தலைமைத்துவங்கள் சிந்திக்க வேண்டும்.”
இவ்வாறு அம்பாறையில் இடம் பெற்ற தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த நாள் நினைவு விழாவில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கான தந்தை செல்வா பிறந்த நினைவு தின நிகழ்வு திருக்கோவில் காயத்ரி கிராமத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் நந்தபாலு தலைமையில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்;
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அன்று தொடக்கம் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளித்து வந்திருக்கின்றது. இதில் ஒளிவு மறைவு இல்லை. இன்று அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.
எனவே அந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படிக்கைகளை அல்லது ஒப்பந்தங்களை செய்து எமது தமிழ் மக்களின் உரிமைகளை தேவைகளை எமது தமிழ்த் தலைமைகள் பெற்றுத்தரவேண்டும் என்று பல தமிழ்மக்கள் என்னிடம் கோரியிருந்தார்கள். அதனையே இங்கு நான் பகிரங்கமாக கூறுகின்றேன். கட்சித் தலைமைகள் சிந்திக்கவேண்டும் .நாங்கள் நாட்டைச் சூறையாடிய கொள்ளையர்களான மகிந்தவையோ, கோட்டாவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை . ஆதரிக்கப் போவதுமில்லை.
69 லட்சம் வாக்குகளை சிங்கள மக்கள் அன்று வழங்கியிருந்தார்கள். இன்று அது தவறு என்பதை உணரத் தொடங்கி இருக்கின்றார்கள். ஆனால் நாம் அன்றும், இன்றும் ரணிலுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றோம். எனவே அவரைப் பயன்படுத்தவேண்டும். அது எமது தார்மீக கடமையும் நியாயமான உரிமையுமாகும். அதற்காக நாம் சோரம் போகத் தேவை இல்லை. அவருடன் நியாயமான உரிமைகள் பற்றி பேசி ஒப்பந்தம் உடன்படிக்கை செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)