
posted 27th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கச்சதீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது
கச்சதீவு அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக கடற்படை உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலமாக அவர் அறிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில்,
புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன.
இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் (அரச அதிபர்) கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவன செய்யுமாறும் கேட்டு கடந்த மார்ச் 27 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கமைய தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் - என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)