
posted 21st April 2022
நிந்தவூர் இப்னுத்தைமியா ஹிப்ளு மத்ரசாவில், புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாபிழாக்களாகப்பட்டம் பெறும் மாணவியர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி ஹிப்ளு மத்ரசாவில் பகுதி நேரமாக புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஏழு மாணவிகளான ஹாபிழாக்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆபள்ளிவாசல் தலைவரும், பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் சபைத் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க், கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர். பி.எம். அர்ஷாத் அகமட், நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் ஏ.எல். நிஜாமுதீன், நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் மௌலவி. எம்.எம். கமறுதீன், சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.எச். றியாழ்(காஸிபி), அதிபர் ஏ.எல். நிஹாருதீன் உட்பட மேலும் பல கல்விமான்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாபிழாக்களாக வெளியேறும் மாணவியர்கள் நிகழ்வில் உரையாற்றிய அதிதிகளால் பெரிதும் பாராட்டப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)