விலை எகிறியும், கியூ குறையவில்லை

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் மக்கள் எதிர்பாராத அளவு எகிறியுள்ள நிலையிலும் இன்று செவ்வாய்க்கிழமையும், எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்டகியூ வரிசைகளில் காணப்பட்ட அவலம் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
குறிப்பாக ஒக்டேன் 92 ரக பெற்றோல் இதுவரை விற்பனையான ஒரு லீற்றர் விலை 254 ரூபாவிலிருந்து 338 ரூபாவாகவும், ஒக்டேன், 95 ரக பெற்றோல் 1 லீற்றர் 283 ரூபாவிலிருந்து 373 ரூபாவாகவும், ஏதர டீசல் 176 ரூபாவிலிருந்து 289 ரூபாவாகவும், எஸ் தர டீசல் 329 ரூபாவாகவும் நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் எகிறிய எரிபொருளுக்கான திடீர் விலை உயர்வுக்கு மத்தியிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகம் இடம்பெற்ற போது பெருமளவில் மக்கள் முண்டியடித்த வண்ணமிருந்ததுடன், கிழக்கில் எரிபொருள் வழங்கிய நிரப்பு நிலையங்களை அண்மித்து மிக நீண்ட கியூ வரிசைகளில் பொது மக்களும் குறிப்பாக தத்தமது வாகனங்கள் சகிதம் பெருமளவு சாரதிகள், பொது மக்களும் காணப்பட்டனர்.

இதேவேளை எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நேற்று முதல் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளபோதிலும், கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டே காணப்பட்டன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்ட போதிலும் கிழக்கில் நிலமை சீரடையவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

மேலும் எரிபொருள் நிரப்புதல் தொடர்பாக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

விலை எகிறியும், கியூ குறையவில்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)