
posted 26th April 2022

சீ.எம்.முபீத்
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரி பெற்று கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அரசுக்கு முட்டுக்கொடுத்துள்ள துரோகிகளுக்கு மக்களே பாடம் புகட்டுவர்.
குறிப்பாக இராஜாங்க அமைச்சு பதவியையும் பெற்று, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்குப் பெரும் துரோகத்தையும், தலை குனிவையும் ஏற்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் இங்கு வருவாரானால் விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர்.
இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், கல்முனை மாநகரசபை மக்கள் காங்கிரஸ் உறுப்பினருமான சீ.எம். முபீத் பெரும் ஆக்ரோஷத்துடன் கூறினார்.
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான சீ.எம். முபீத், எம்.ஐ.எம். அப்துல் மனாப், பஸீறா றியாஸ், யூ.எல். சித்தி சமீனா ஆகியோர் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போது தலைமைதாங்கி கருத்து வெளியிடுகையிலேயே உயர் பீட உறுப்பினர் முபீத் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை மாநகரசபை மேயர் அலுவலக மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நான்கு மாநகரசபை உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு மாறாக இராஜாங்க அமைச்சு பதவியையும் ஏற்று அரசுக்கு முட்டுக்கொடுத்துவரும் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் தொடர்பில் சீற்றத்துடன் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இராஜாங்க அமைச்சர் முஷாரப் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதுடன், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கட்சியால் பறிக்கப்பட ஆவன செய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திக் கூறினர்.
இந்த ஊடக சந்திப்பில் உயர்பீட உறுப்பினர் முபீத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.
“அரசியலில் ஐஸ்கிறீம் பேபியாகவிருந்த முஷாரப் முதுநபீன் பள்ளிவாசலுக்குள்ளிருந்தே பொய்ச்சத்தியம் செய்து பழக்கப்பட்டவர். இன்று தனக்கு அரசியல் அந்தஸ்த்து தந்த எம் சத்தியத்தலைவரையே சத்தியம் செய்ய அழைக்கும் நன்றி கெட்ட நிலையிலுள்ளார்.
அரசியலால் ஒரு சதமேனும் அனுபவிக்கமாட்டேன், என்னை வாழ வைக்க எனது கறுப்பு கோட் (சட்டத்தரணிக்கான) உள்ளது என சத்தியம் செய்து முழங்கிய அவர், நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் அரசுக்கு பல்வேறு டீல்களுடன் முட்டுக்கொடுத்து இன்று பதவி ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
இவை மூலம் கட்சிக்கு மட்டுமன்றி, நம்பி வாக்கமளித்த மக்களுக்கு, ஏன் முஸ்லிம் சமூகத்திற்கும் முஷாரப் பெரும்துரோகமிழைத்துள்ளதுடன், பெரும் தலை குனிவையும் ஏற்படுத்தியுள்ளார்.
,
பொய்க்கு மேல் பொய் கூறி, கட்சியையும், மக்களையும் ஏமாற்றி இராஜபோகம் அனுபவிக்க கனவு கண்டுள்ள இவரது துரோகத்தனங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
இவரால் இனியொரு சமயம் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வர முடியுமா? இப்போதும் நம்மக்கள் மத்தியில் வந்து முகம் காட்டத்தான் முடியுமா?
சொந்த ஊரான பொத்துவிலுக்கு வந்தாலே அவரை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகவேயுள்ளனர்.
ஆலம் பழத்தையொத்த முஷாரப் இன்னும் மக்களை ஏமாற்ற முனைவதையும், எம் தலைவரை சிறுபிள்ளைத்தனமாக சத்தியம் செய்ய அழைப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தலைவர் ரிஷாட்டைப் பற்றி கதைப்பதற்கே அருகதையற்ற முஷாரப் அரசியல் தஞ்சம் கோரத்தயாராக வேண்டும்” என்றார்.
மாநகர சபை உறுப்பினர் திருமதி. பஸீறா றியாஸ் கருத்து வெளியிடுகையில்,
“நாட்டின் மூவின மக்களும் இன்றைய அரசை வீட்டுக்கனுப்பக்கங்கணம் கட்டி போராட்டகளத்தில் நிற்கும் சமயம், முட்டுக்கொடுக்கும் முஷாரப் போன்றவர்களின் செயற்பாடுகள் பெரும் கவலையையும், விசனத்தையும் தருகின்றன.
ஜனாஸா எரிப்பு உட்பட முஸ்லிம் மக்களை வேதனையின் விழிம்பிற்கே தள்ளிய இந்த அரசுடன் ஒட்டிக்கொண்டமை பெரும் வெட்கக் கேடானதும், வேதனைக்குரியதுமாகும். இது பெரும் துரோகத்தனமாகும்.
இத்தகையவர்களை மக்களும் விடமாட்டர்கள், இறைவனும் விடமாட்டான்” என்றார்.
உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவிக்கையில்,
கட்சிக்கும் மக்களுக்கும் துரோகமிளைத்துள்ள இராஜாங்க அமைச்சர் முஷாரப் முனாபிக்தனத்தின் காட்சிப் பொருளாக உள்ளார்.
நப்பாசை கொண்ட இந்த வித்தைக்காரரை புறக்கணிப்போம்.
முடிந்தால் பெற்ற பதவிக்காக அவரது சொந்த ஊரான பொத்துவிலிலேயே நூறு பேரைத்திரட்டிவர வேற்பு ஒன்றை அவர் பெறட்டும்!” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY