யாழ் மாநகர முதல்வர் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களால் கௌரவிக்கப்பட்டார்

பிரான்சில் 'குட்டி யாழ்ப்பாணம்' என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் வர்த்தகர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள், தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள், மாநகர சபையின் செயற்பாடுகள், தொடர்பான ஒரு நீண்ட நேரக் கலந்துரையாடலாக இது அமைந்தது. இது தொடர்பில் மாநகர முதல்வர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி நடாத்திய பிரான்சின் பிரபல வர்த்தகர் பாஸ்கரன், பிரான்ஸ் இலங்கை தமிழ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் பிரான்ஸில் வளர்ந்து வரும் பிரபல வர்த்தகருமான தயா உட்பட பல வர்த்தகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வாழ்தமிழ் வர்த்தகர்கள் யாழ். மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகளையும், மணிவண்ணனின் செயற்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினார்.

லாச்சப்பல் என்பது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுகின்ற நிலையில் யாழ். மாநகர முதல்வரை இங்கு வரவழைத்து மதிப்பளிப்பதனை பிரானஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் பெருமை கொள்ளுகின்றோம் என்றும் தெரிவித்தனர்.

மீண்டும் எங்களுடைய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்ற கனவுடன்தான் நாங்கள் இங்கு பல இன்னல்களை சந்தித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் சீவிக்கின்றோம். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாயகத்து மக்களது கல்வி, சுயதொழில், வாழ்வாவதார,மேம்பாடு தொழில் முயற்சி மற்றும் அவர்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணுவதற்கு தம்மால் ஆன உதவிகளை மேற்கொண்டுவதாகவும் தெரிவித்ததோடு யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ். மாநகரத்தில் ஒரு பெரிய முக்கியமான செயற்திட்டம் ஒன்றிணை தாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுத்தி தருவாதாக உறுதியளித்தனர்.

மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் பிரான்ஸ் வாழ் வர்த்தக சமூகத்தினரால் மதிப்பளிக்கப்பட்டதுடன் இரவு உணவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ் மாநகர முதல்வர் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களால் கௌரவிக்கப்பட்டார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)