
posted 18th April 2022

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான வைத்திய சேவையில் நிலவிவரும் வைத்திய உபகரணங்களின் குறைபாடுகளை கண்டறிந்த மன்னார் மாவட்ட லயன்ஸ் கழகம் 306 பி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சத்திர சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவம் மன்னார் பொது வைத்தியசாலையில் திங்கள் கிழமை (18.04.2022) காலையில் இடம்பெற்றது.
மூன்றரை கோடி ரூபா பெறுதியான இவ் உபகரணங்கள் சர்வதேச லயன் கழகத்தின் நிதியில் 75 வீதமும் சர்வதேச லயன் கழக உதவி நிதி இணைப்பாளரும் மன்னார் லயன்ஸ் கழக உறுப்பினருமான லயன் எஸ்.எஸ். இராமகிருஷ்ணனின் முயற்சியால் அமெரிக்கா (ஐஎன்எச்ஓ) மற்றும் அவுஸ்ரேலியா எந்திரி (ஈஎஸ்எவ்) அமைப்புக்களின் 25 வீத நிதி உதவியிலேயே இம் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான உபகரணப் பொருட்கள் பெறபட்டு கையளிக்கப்பட்டதாகும்.
இக் கையளிப்பு வைபவமானது முன்னைநாள் மாவட்ட ஆளுநர் லயன் எம்.ஐ.எம். ராசீக் தலைமையில் நடைபெற்றபோது முன்னைநாள் சர்வதேச லயன்ஸ் பணிப்பாளர் லயன் சுணில் வட்டவெல தற்பொழுது மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் லயன் ராஜ்குமார் உட்பட வெளி மாவட்ட மற்றும் மன்னார் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. விநோதன் மன்னார் மாவட்ட பொது வைத்திசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி செந்துபதிராஜா மயக்க மருந்து நிபுணர் வைத்திய கலாநிதி மாயக்க முணசிங்க மற்றும் மன்னார் வைத்திசாலை வைத்தியர்கள் தாதியர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)