
posted 27th April 2022
இலங்கையின் முக்கிய இரு முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குள்ளும் பரபரப்பான அரசியல் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக முக்கிய முஸ்லிம் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளுமே உள்வீட்டுப் பிரச்சினைகளால் பரபரப்படைந்துள்ளன.
அதிலும் மேற்படி இருகட்சிகளினதும் உச்சபீடக்கூட்டத்தீர்மானங்களை உதாசீனம் செய்தும் கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தலைவர்கள் தவிர) இன்றைய கோட்டா அரசுக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்துவரும் விவகாரமே முதன்மை பெற்றுள்ளது.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவாக – அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் கட்சிகளால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த நிலையில்,
கடந்த வாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் இராஜாங்க அமைசர் பதவியையும் கட்சிகளைப் புறந்தள்ளி பெற்றுக் கொண்டுள்ளமை கட்சி வட்டாரங்களிலும், கட்சிப் போராளிகள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் கூடி அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமதை கட்சியை விட்டும், அதாவது கட்சி உறுப்புரிமையிலிருந்தே நீக்கிவிடுவது என முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்பட்டுள்ள மூன்று முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஓய்வு பெற்ற நீதவான் ஒருவர் முன்னிலையில் விசாரணைக்கு வரவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்சபீடம் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கூடி இராஜாங்க அமைச்சு பதவி ஏற்ற முஷாரப் முதுநபீன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், அலிசப்ரி ரஹீம் ஆகியோர், எதிர்வரும் 4, 5, 9 ஆம் திகதிகளில் ஏதாவது ஒரு தினம் விசாரணைக்கு வரவேண்டுமெனக் கோரி முடிவுசெய்துள்ளது.
இவ்வாறு பரபரப்பு அடைந்துள்ள இரு முஸ்லிம் கட்சிகளதும் உறுப்பினர்களது அரசுக்கு ஆதரவு விவகாரம் எதில் போய் முடியுமோ என்பதே இப்போது கட்சி வட்டாரங்களில் எழுப்பப்படும் கேள்வியாகும்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)