
posted 18th April 2022
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் (எஸ்.ரி.ஆர்) புனித நோன்பு திறக்கும் மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்றை சிறப்பாக நடத்தினர்.
சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்-ஹாபில் ஹாதிக் இப்றாகிம் தலைமையில், இளைஞர் காங்கிரஸ் பணிமனையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌஸாத் உட்பட மற்றும் பலரும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஓர் அங்கமாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் இருவர் தலைவர் ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தலைவர் ரவூப் ஹக்கீம் நிகழ்வில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக நாடாளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வந்த போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
அதாவது பிரதி சபா நாயகர் இராஜினாமாச் செய்துள்ளதால், புதிய பிரதி சபா நாயகர் தெரிவு எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சி தரப்பினால் முன்மொழியப்படுபவரையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென குறித்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
இதனை மீறி ஆளும் தரப்பால் முன்மொழியப்படுபவரை இவர்கள் வாக்களித்து ஆதரிப்பார்களானால் நிச்சயம் கட்சி அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும்” எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)