மர்ஹூம் வை.எம்.ஹனிபாவின் பெயரை வீதிக்கு சூட்டத் தீர்மானம்

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த மர்ஹூம் வை.எம். ஹனிபாவின் பெயரை சாய்ந்தமருத்திலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 49ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (26) மாலை, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எஸ். அப்துல் றபீக் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, சாய்ந்தமருது-16ஆம் பிரிவில் அமைந்துள்ள வீ.எச். வீதியில் தொடங்கி தாமரை வீதி வரை செல்லும் பாதைக்கு வை.எம். ஹனிபா வீதி என்று பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த இவ்வீதிக்கு இதுவரை எவ்வித பெயரும் இல்லாதிருப்பதாகவும் இவ்வீதியிலேயே மர்ஹூம் வை.எம். ஹனிபா வாழ்ந்த வீடு அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். அப்துல் றபீக், இப்பகுதி வாழ் மக்கள் இவ்வீதிக்கு அன்னாரது பெயரை சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர் எனவும், இதனை எமது மாநகர சபை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து இப்பெயர் சூட்டும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சாய்ந்தமருது-15 மற்றும் 17ஆம் பிரிவுகளில் அமைந்துள்ள சனசமூக நிலைய வீதி எனவும் சிலோன் வீதி எனவும் இரு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்ற பாதைக்கு ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பிரேரணையையும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். அப்துல் றபீக் கொண்டு வந்திருந்தார்.

அதேவேளை, பெரிய நீலாவணை-02 அக்பர் கிராமத்தில் அமைந்துள்ள 13ஆம் குறுக்கு வீதிக்கு தக்வா பள்ளி வீதி எனவும், 14 ஆம் குறுக்கு வீதிக்கு டீன் வீதி எனவும் பெயர் சூட்டுவது எனவும் இச்சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் சமர்ப்பித்திருந்தார்.

மர்ஹூம் வை.எம்.ஹனிபாவின் பெயரை வீதிக்கு சூட்டத் தீர்மானம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)