
posted 27th April 2022
மனித புதைகுழி அகழ்வு பணியை மேற்கொள்ள;
எவ்வளவு காலம் தேவை?
என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
எடுக்கப்பட்ட எச்சங்களை பிரித்தெடுத்து இதற்கான அறிக்கைகள் வருவதற்கு எவ்வளவு காலம் தேவை?
என்பதின் இரு அறிக்கைகளையும் சட்டவைத்திய அதிகாரியிடமிருந்தும் தொல்பொருள் போராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கட்டிட வேலைகள் இடைநிறுத்தப்பட்டு, மனித எச்சங்களுக்கான அகழ்வு வேலைகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்த நிலையில் மீண்டும் இவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சதொச புதைகுழி வழக்கு செவ்வாய்கிழமை (26.04.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி அப்துல் சமட் கிபத்துல்லா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன்னார் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு செவ்வாய் கிழமை (26.04.2022) அழைக்கப்பட்டபோது, தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ்சோமதேவ அவர்களும், சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ச அவர்களும், இவர்களுடன் இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் மற்றும் றனித்தா ஞானராஜா ஆகியோரும், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரனி திருமதி எஸ். புராதினியும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.
இது தொடர்பாக இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் ஆஐராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
மன்னார் சதொச மனித புதைபுகுழி வழக்கு செவ்வாய் கிழமை (26.04.2022) விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு தவணைகள் சட்டவைத்திய அதிகாரியும், தொல்பொருள் திணைக்கள பேராசிரியர் ஆகிய இருவரும் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் இவ்வழக்கு இன்றையத் தினம் (26.04.2022) எடுக்கப்பட்டது.
இன்றைய தினம் (26.04.2022) இவ் வழக்கிற்கு மேற்கூறப்பட்ட இருவரும் மன்றில் சமூகமளித்திருந்தனர்.
இவர்கள் இம் மன்றில் தெரிவிக்கையில், மன்னார் சதொச மனித புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யப்பட வேண்டுமானால் இதற்கான தேவைகள் அவர்களால் மன்றில் முன்வைக்கப்பட்டது.
இவ் அகழ்வுக்கு இருவரும் தனியாக நின்று செய்ய முடியாது எனவும், அதற்கு பிரத்தியேக ஆட்பலம் செலவு மற்றும் நேரங்கள் ஓதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டு எனவும் மன்றின் கவனத்துக்கு இவர்களால் முன்வைக்கப்படடிருந்தது.
இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஆஜராகி இருந்த சட்டத்தரணிகள் என்ற ரீதியில் நாங்கள் இந்த நீதிமன்றுக்கு கொண்டு வந்ததாவது;
ஏற்கனவே 2019.08.23ந் திகதி அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும், சட்டத்தரனிகளும், பொலிசாரும் காணாமல்போன அலுவலகமும், யாவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
இது தொடர்பான சகல அறிக்கைகளும் கிடைக்கப் பெற்றதும், இது தொடர்பாக எல்லோரும் ஒட்டு மொத்த தீர்வுக்கு வருவதென்று இதன் பிரகாரம் நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் சோகோ பொலிசாரிடம் கேட்டிருந்தோம். இவர்களால் அகழ்வு செய்யப்பட்ட வரைபடங்கள் ஆவணங்களை நீதிமன்றில் அழைப்பதற்கு ஆவண செய்யுமாறும், அதேவேளையில், இவ் அகழ்வு பணி நடைபெற்றபோது பல பொருட்கள் அதன் தன்மைகள் காலத்தையும் அளவுடுவதற்கும் அனுப்பப்பட்டிருந்தன.
உதாரணமாக, இவ் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள், செருப்புக்கள் போன்ற பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன.
இதற்கான அறிக்கைகளை பெறுவதற்காக நீதிமன்றத்தை நாம் கோரி இருந்தோம். இத்துடன், சட்டவைத்திய அறிக்கையும், தொல் பொருள் பேராசிரியரின் அறிக்கையும் வர வேண்டும் என்றும், இவைகள் யாவும் கிடைத்த பின்பே ஒட்டுமொத்த தீர்மானத்துக்கு வர முடியும் என்றும், ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட எச்சங்கள் தனிமையாவும், பொருட்கள் வேறாகவும் அகழ்வு செய்யப்பட்ட நிலையில் இவ் வழக்கு இடைநிறுத்தப்படடிருந்தது.
எனவே அந்த பணியை தொடர்ந்து அந்த பொருட்கள் எடுக்கப்பட்டு அவற்றின் விபரங்கள் நீதிமன்றுக்கு வரும்போது தான் இதன் அறிக்கைகள் பெற்றுக் கொள்ளலாம் என நாங்கள் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.
இதன் அடிப்படையில் நீதிமன்றம் இரு கட்டளைகளை ஆக்கியுள்ளது. மனித புதைகுழி அகழ்வு பணியை மேற்கொள்ள எவ்வளவு காலம் தேவை?
என்னென்ன நடவக்கைகள் எடுக்க வேண்டும்? எடுக்கப்பட்ட எச்சங்களை பிரித்தெடுத்து இதற்கான அறிக்கைகள் வருவதற்கு எவ்வளவு காலம் தேவை? என்பதின் இரு அறிக்கைகளையும் சட்டவைத்திய அதிகாரியிடமிருந்தும், போராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆகவே இவர்கள் இவ் அறிக்கைகளை பெறுவதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படும் என அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இவ் வழக்கானது 20.05.2022 அழைப்பதாக நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது
இதேவேளையில் காணாமல் போனோர் சார்பாக ஒரு விண்ணப்பம் இம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, மனித எச்சங்கள் அகழ்வு செய்யப்பட்ட இப் புதைகுழியானது நீரும், கழிவுப் பொருட்களும் தேங்கி இருக்கும் காரணத்தினால், பொலிசார் இதனைப் பாதுகாத்துத் தரவேண்டுமென ஒரு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றும், அத்துடன் இக் கழிவுப் பொருட்களை நகர சபையினால் துப்பரவு செய்யவும் நீதிமன்றில் கோரிக்கை விடப்படிருந்தது என்பதையும் எடுத்தரைத்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)