பேராசிரியர்  சந்திரசேகரத்தின் மறைவு  - ரவூப் ஹக்கீமின் இரங்கல் செய்தி

இலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்ற நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் மறைவு பொதுவாக கல்வித் துறைக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னர் கொழும்பு ‌பல்கலைகழக கல்விப் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தது மட்டுமல்லாமல், நாடாளாவிய ரீதியில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்சியை ஊட்டுவதற்கு அயராது பாடுபட்ட ஒருவராக இருந்திருக்கிறார். தமிழ் மக்களின் கல்வியில் மட்டுமல்ல,பொதுவாக சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் அவர் காட்டிய ஆர்வ‌ம் குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையில் முஸ்லிம்களும் சிறந்து விளங்க வேண்டும் என அவர் மனதார விரும்பினார். இலங்கையில் பல்கலைகழக மட்டத்திலும், சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.

குறிப்பாக மலையகத்தில் பிறந்தவர் என்ற வகையில் மலையக மக்களைப் பெரிதும் மையப்படுத்தியதாக அவரது எழுத்துக்கள் இருந்தன. அவர் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அடிக்கடி நேர்காணல் செய்யப்படுபவராகவும் இருந்திருக்கிறார்.

அத்துடன், தனிப்பட்ட முறையில் நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் எழுதிய தந்தை செல்வநாயகம் பற்றிய ஒரு நூலைப் பாராட்டி அவர் எழுதிய கருத்துக்களை இன்றும் நான் பெரிதாக மதிக்கின்றேன்.

எந்த விதமான வித்தியாசமும் இன்றி, கல்விச் சமூகத்தினருடன் மட்டுமல்லாது, சாதாரண பொது மக்களுடனும் கூட மனம் விட்டு பழக கூடிய தன்மையை இயல்பாகவே அவர் கொண்டிருந்தார். எந்தவிதமான ஆரவாரமும் இன்றி கல்விப் பணியில் தனது காலத்தை அவர் முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பதிவு செய்கின்றேன்.

பேராசிரியர்  சந்திரசேகரத்தின் மறைவு  - ரவூப் ஹக்கீமின் இரங்கல் செய்தி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய