பேசாலை ஊடாக நடைபெறும் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்த ஆலோசனைக் கூட்டம்.

தற்பொழுது இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக மக்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் போதைப் பொருட்களும் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.

இவைகள் பேசாலை பகுதி ஊடாகவே இடம்பெற்று வருவதாக புலணாய்வு பிரிவு மூலம் தெரியவருகின்றது.

இவற்றை கடற்படையினரும், மீனவர்களாகிய அனைவரும் இணைந்து செயல்பட்டு இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம் என கடற்படையினர் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக மீனவர்கள் மற்றும் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்;

தற்பொழுது நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சனை காரணமாக பேசாலை மக்கள் அல்ல, வெளியிடங்களிலுள்ளவர்களே அகதிகளாக இந்தியாவுக்கு தற்பொழுது சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் பேசாலை ஊடாக செல்வதாகவும், போதைப் பொருட்கள் கடத்தல் பேசாலை ஊடாக இடம்பெறுவதாக கூறப்படுகின்றபோதும், இதற்கு முக்கிய காரணமாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது பேசாலை கடற்கரையோரத்தில் மின்அனல் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளதால் இப் பகுதியில் பாரிய அளவு மீன்பிடி குறைந்துள்ளது.

இந்திய இலுவை படகுகளின் வருகை தொடர்ந்து இப் பகுதியில் நிலவி வருவதால் மீனவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

மீன்பிடி பாதிப்பு மட்டுமல்ல அத்துடன் தங்கள் மீன்பிடி வலைகளையும் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பேசாலை பகுதியில் அதிகமான மீனவ குடும்பங்கள் பெரும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடந்த காலங்களில் இயற்கை மற்றும் இந்திய இலுவை படகுகளால் இப் பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்ட மீன்பிடி உபகரணங்களின் அழிவுக்கு அரசினால் எவ்வித நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.

இவற்றை ஈடுசெய்ய முடியாது தவிக்கும் பேசாலை மீனவர்கள் தற்பொழுது குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்கு முனையும் செயலாகவே அகதிகளை ஏற்றிச் செல்வது, போதை வஸ்துக்கள் கடத்துவது போன்ற செயல்பாட்டுகளில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இவைகள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது பேசாலை சமூகத்தின் ஆவலாக இருந்தாலும், நிறுத்துவதற்கு முனையும்போது இதை முன்னெடுக்கும் பொது மக்கள் ஆபத்துக்கும் உள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது பொலிசாருக்கு இச் சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக தகவல் வழங்கிய சற்று நேரத்தில் தகவல் சட்டவிரோத செயல்பாட்டாளர்களுக்கு பறந்து விடுகின்றது. இதனால் பலர் தகவல் வழங்க அச்சப்படுகின்றனர்.

இதன் காரணமாக தகவல் கொடுக்க எவரும் தற்பொழுது முன்வருவது இல்லையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இருந்தபோதும் பேசாலை பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாட்டுக்கு பேசாலை சமூகம் பூரண ஆதரவைத் தரும் என்பதில் ஐயமில்லையென இங்கு தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது பேசாலையூடாக அகதிகள் அழைத்துச் செல்வதும், போதை பொருட்கள் கடத்தல் சம்பங்கள் அதிகரித்து வருவதாலும் இவற்றை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கையாக, பேசாலை மீனவர்களினதும், பொது மக்களின் உதவியையும் நாடும் நோக்குடன் கடற்படையினர் பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் ஊடாக ஞாயிற்றுக் கிழமை (10.04.2022) அவசரக்கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

இதையிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்குத்தள கேட்போர் கூடத்தில் பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் தலைமன்னார் கடற்படை முகாம் கமாண்டர் குமார, மன்னார் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி எஸ். பவானி பேசாலை மீனவ சமூக பிரதிநிதிகள் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் என பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேசாலை ஊடாக நடைபெறும் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்த ஆலோசனைக் கூட்டம்.

வாஸ் கூஞ்ஞ

பேசாலை ஊடாக நடைபெறும் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்த ஆலோசனைக் கூட்டம்.