
posted 6th April 2022
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான உறுப்பினர் அஹமட்லெப்பை றபீக், அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கல்முனை மாநகர சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரி சுகன் ஸ்ரீநாத் அத்தநாயக வெளியிட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான உறுப்பினர் அஹமட்லெப்பை றபீக் என்பவரது கட்சி உறுப்புரிமை இல்லாதொழிந்துள்ளதால் மாநகர சபையின் உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளார் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகித்துக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இது குறித்து அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு வட்டாரத்திலும் வெற்றி பெறாத போதிலும் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தை பெற்றிருந்தது.
இந்த ஆசனத்திற்கு மர்ஹூம் இசட்.ஏ.எச்.ரஹ்மான் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, சில மாதங்கள் பதவி வகித்து வந்த நிலையில், அவர் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைவதற்காக உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அஹமட்லெப்பை றபீக் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய