பணிபகிஷ்கரிப்பு வெற்றிகரம்!

நாடுதழுவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை பத்திற்கும் அதிகமான தொழிற் சங்கங்கள் முன்னெடுத்த ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு, மற்றும் ஹர்த்தால் நடவடிக்கைகள் பெரு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டபயராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு, ஹர்த்தால் போராட்டம் இன்று தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டன.

ஆசிரியர் தொழிற்சங்கம், சுகாதார சேவை சங்கம், துறைமுக சங்கம், அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம், வைத்திய ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம், மின்சாரம், புகையிரதம், பெற்றோலியம், தபால் மற்றும் வங்கிகள், தோட்டத்தொழிற்துறை சங்கம் உட்பட பல தொழிற் சங்கங்கள் இன்றைய அரசுக்கு எதிரான பணிபகிஷ்கரிப்பு - ஹர்த்தால் பேராட்டத்தில் பங்கு கொண்டன.

இந்த தொழிற்சங்கங்களின் அடையாள பணிபகிஷ்கரிப்பு - ஹர்த்தால் நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, கிழக்கிலங்கையிலும் இப்போராட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கில் இன்று பெரும்பாலான பாடசாலைகள், அரச மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டும், தனியார் பஸ் சேவைகள் நடைபெறாதும், தபாலகங்கள் அனைத்தும் மூடப்பட்டும், அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது.

கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் முக்கிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருப்பினும் நாட்டு மக்கள் வீதிக்கு இறங்கி தம் அவலங்களை முன்னிறுத்தி எழுப்பி வரும் குரல் இன்றுவரை அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கொலியாவே உள்ளது என்பதே நிதர்சன நிலையாகும்!

பணிபகிஷ்கரிப்பு வெற்றிகரம்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)